மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா நடக்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் புனீத் ராஜ்குமார் சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்தவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் லோஹித், திரையுலகிற்காக இவரது பெயர் புனீத் ராஜ் குமார் என மாற்றப்பட்டது. இத்தனை பெயர்களை கொண்டிருந்தாலும், இவர் செல்லமாக அழைக்கப்படுவது “அப்பு” என்ற பெயரால்தான். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த புனீத் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே பேரதிர்ச்சியாக அமைந்தது.சொல்லப்போனால் இன்றளவும் பலராலும் நம்ப முடியாததாகவே அப்புவின் மரண செய்தி உள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் காலமான அவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டுடியோவில் இடம் பெற்றுள்ள தந்தை ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே நேற்று புனீத் ராஜ்குமாரின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் #AppuLiveson என்ற ஹேஷ்டேக்கிற்கு கீழ் புனீத்தின் புகைப்படத்தை பதிவிட்டு தங்கள் நினைவலைகளை பகிர்ந்தனர்.
அந்த வகையில் நடிகர்கள் சரத்குமார், கிச்சா சுதீப், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண், இயக்குநர்கள் ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல் என அனைவரும் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு பாரத ரத்னா விருது போல கர்நாடக ரத்னா எனும் விருதினை மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு வழங்க உள்ளார்.
இதற்கான விழா வரும் நவம்பர் 1 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.வழங்க உள்ளார். இதுவரை 9 பிரபலங்களுக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில் தற்போது 10வது விருது வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினி பங்கேற்கிறார். இதற்காக நவம்பர் 1 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விமானம் மூலம் அவர் பெங்களூரு புறப்பட்டு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.