சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி என என் அப்பாவை சொல்லாதீர்கள் என மகள் ஐஸ்வர்யா சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் எப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறது அவருடைய பார்வை. இது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசப்பட்டது இல்லை’ என ரஜினி தெரிவித்தார்.
நடந்தது என்ன?
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டின் மத அரசியலை மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, என்னோட அப்பா ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள். எனக்கு அதைக் கேட்டதும் ரொம்ப வருத்தமாக உள்ளது. ரஜினி ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கவே மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. லால் சலாம் படத்தில் எங்க அப்பாவை தவிர யாரும் தைரியமாக நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி லால் சலாம் படம் நிச்சயம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த நிச்சயமாக சங்கி இல்லை. இந்த படம் பார்த்தா உங்களுக்கே புரியும்” என தெரிவித்தார். மகளின் பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார்.
ஐஸ்வர்யா பேசிய இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய்யை விமர்சித்து பேசியதாக கூறப்பட்ட காக்கா - கழுகு கதை குறித்து விளக்கமளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.