Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது.


நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி: 


பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அடுத்தடுத்து கூட்டணியை மாற்றி வரும் நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளை I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.






”பாஜக - நிதிஷ் கூட்டணி நீடிக்காது”


பாஜக - நிதிஷ் கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் காட்டமாக பேசியுள்ளார். அதன்படி, ”அடுத்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், நான் எனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு வட்டியுடன் திருப்பித் தருவார்கள். தற்போதைய சூழலில் பீகாரில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபுறம், நிதிஷ் குமாரை முகமாக கொண்ட பாஜகவால் ஆதரிக்கப்படும் கூட்டணி,  மறுபுறம் ஆர்ஜேடி உள்ளிட்ட பிற கட்சிகள். இதே சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்காது. அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன், பல அதிரடியான முன்னேற்றங்கள் நிகழும். மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குள், அந்த முன்னேற்றங்களை காண்பீர்கள். ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான நிதிஷ் குமாரின் கூட்டணி நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் தனது கூட்டணியை மாற்றுவார் என பல மாதங்களாக கூறி வருகிறேன். அவரது அரசியலில் இது ஒரு அங்கமாக உள்ளது. ஆனால், இது தற்போது பாஜகவிற்கும் பொருந்தியுள்ளது. பல்வேறு விவகாரங்களில் நிதிஷ்குமாரை  குற்றம்சாட்டி வந்த பாஜக, தற்போது அவருக்கு ஆதரவளித்து முதலமைச்சராக்கியுள்ளது. எனவே, 2025ம் ஆண்டு தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பெரும்பான்மையை கைப்பற்றும்” என பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார்.


இதையும் படிங்க: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை - டி.ஆர். பாலு