Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த நிலையில், அவர் நடித்த பிற படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினி 72 வயதான போதிலும், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் ஆக்‌ஷனில் களத்தில் பாக்ஸ் ஆபிசில் கலெக்‌ஷனை வாரி குவித்தது. தொடர்ந்து ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியார், ரித்திகா சிங் என ரசிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.

 

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 171 படத்திலும் ரஜினி நடிக்க உள்ளார். அடுத்ததாக ஜெயிலர் 2ம் பாகத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீசாக உள்ளது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில், மொய்தீன் பாயாக ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார். 

 

இந்த நிலையில் ரஜினி கேமியோ ரோலில் நடித்த படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 1978ம் ஆண்டு துரை இயக்கத்தில் வெளிவந்த பாவத்தின் சம்பளம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த தாயில்லாமல் நான் இல்லை படத்திலும், தெலுங்கு படத்தின் ரீமேக்கான நட்சத்திரம் படத்திலும், 1982ம் ஆண்டு மௌலி இயக்கத்தில் வெளிவந்த நன்றி மீண்டும் வருக படத்திலும், கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் சரிதா நடிப்பில் வெளிவந்த அக்னி சாட்சி படத்திலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

தொடர்ந்து 1983ம் ஆண்டு எஸ்வி ரமணன் நடிப்பில் வெளிவந்த உருவங்கள் மாறலாம் படத்திலும், 1985ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த யார் படத்திலும், 1987ம் ஆண்டு கே. பாலச்சந்தர் நடிப்பில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் படத்திலும், 1990ம் ஆண்டு வெளிவந்த பெரிய இடத்து பிள்ளை படத்திலும், 1993ம் ஆண்டு வெளிவந்த வள்ளி படத்திலும், குசேலன் மற்றும் ரா ஒன் உள்ளிட்ட படங்களிலும் கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.