பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நடியட்வாலா தயாரிப்பில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வேட்டையன்


நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ. ஞானவேல் இயக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். லைகா ப்ரோடக்‌ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஒரு சில காட்சிகள் ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட இருக்கின்றன. இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை நிறைவு செய்துவருகிறார் லோகேஷ் கனகராஜ். 


தலைவர் 171 படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா மேனன் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்திற்கான திரைக்கதையை எழுதிவருவதாக உறுதிபடுத்தினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இப்படியான நிலையில் பான் இந்திய படமொன்றில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்ப்பு






பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நடியட்வாலாவை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இருவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சஜித்  “ ரஜினிகாந்த் அவர்களுடன் கை கோர்ப்பதில் மகிழ்ச்சி.” என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்