கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் புதிய வீடு வாங்குதல் பணிகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் ரூ.3,000 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு அவ்வப்போது உயர்த்தபட்டு வருகிறது. மேலும், எம் சாண்ட் ரூ.4,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் ரூ.5,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கனிம பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.


ஏற்கெனவே தமிழக அரசு பதிவு கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் எம் சாண்ட், பி சாண்ட் ,ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் வரை உயரும். தமிழக அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக அறிவித்து இருந்தனர். 




இதனை தொடர்ந்து, அகில இந்திய கட்டுநர் சங்கம் திருச்சி மையம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட அலுவலக பழைய சாலையில் கட்டுமான மூலப்பொருள்களான M சாண்ட், P சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை கல்குவாரி உரிமையாளர்கள்,  உற்பத்தியாளர்கள் நினைத்த மாத்திரத்தில் தாறுமாறாக அடிக்கடி விலையேற்றுவதை  கண்டித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்டுமான அகில இந்திய கட்டுநர் சங்கம், பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, கீரடாய், நெடுஞ்சாலை துறை ஒப்பந்தகாரர்கள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், போஸ்டல் மற்றும் பி.எஸ்.என்.எல் கான்ட்ராக்டர்கள் சொசைட்டி, திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம், தென்னக ரயில்வே இன்ஜீனியர்ஸ் கான்ட்ராக்டர் அசோசியேசன், சிவில் இன்ஜீனியர்ஸ் கன்சல்டிங் திருச்சி மையம், தமிழ்நாடு பிளையாஷ் பிரிக்ஸ் மற்றும் பிளாக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், திருச்சி டிஸ்ரிக்ட் சிவில் இன்ஜீனியர்ஸ் அசோசியேசன், தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கம் ஆகிய அனைத்து அமைப்புகளும் சேர்ந்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட அமைப்புகளின் அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும், தொழிலாளர்களும், மக்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.




மேலும், கல்குவாரி உற்பத்தியாளர்கள் எவ்வித நியாயமான காரணங்களுமின்றி நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி செயற்கையாக விலை உயர்வை அறிவித்து நடைமுறைப்படுத்துவதை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இதனால் அனைத்து ஒப்பந்தகாரர்களும், மத்திய, மாநில மற்றும் தனியாக வீடுகட்டுபவர்கள் ஆகியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பணிகளை முடிக்கவோ அல்லது தொடரவோ முடியாத அளவிற்கு, கடுமையான விலையேற்றம் அடிக்கடி நடைபெறுவதால் மிகுந்த மனஉலைச்சலுக்கும், பண இழப்பிற்கும் ஆளாகி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விடுவதாக தெரிவித்தார்கள்.மேலும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பணியை முடிக்க இயலாத சூழ்நிலையில் கட்டிட உரிமையாளர் - கட்டுமான ஒப்பந்ததாரர்களிடையே சர்ச்சைகள் ஏற்பட்டு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்கள்.


ஆகவே தமிழ்நாடு அரசு இதன் மீது உடனடியாக தனி கவனம் செலுத்தி, விலை உயர்வை கட்டுப்படுத்தவும். இவ்வாறு அடிக்கடி தன்னிச்சையாக அறிவிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு கட்டுமான பொருள்களுக்கான ஒழங்குமுறை ஆணையம் ஒன்றை அமைத்து கட்டுமான தொழிலில் உள்ள பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான உப தொழில் செய்யும் உரிமையாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் சிறக்க ஆவண செய்யுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கமால காலதாமதம் படுத்தினால், பல ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் . ஆகையால் உடனடியாக தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.