சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றான ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் பாடல் குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகி உள்ளது.


ரஜினிகாந்தும் ஐந்து குழந்தைகளும்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி  80கள், 90களின் குழந்தைகளால் மிகவும் ரசித்துக் கொண்டாடப்பட்டு, மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’.


1989ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்  கௌதமி, ரகுவரன், சின்னி ஜெயந்த், ரவிச்சந்திரன், கோவை சரளா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும்.




பேபி ஷாலினி உள்ளிட்ட ஐந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் நபராக ரஜினி கலகலப்பாக நடித்திருக்கும் இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.


அனிமேஷன் பாடல்


குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராஜா சின்ன ரோஜாவோடு...’ பாடலும், அதில் இடம்பெற்றுள்ள அனிமேஷன் கார்ட்டூனும் இன்று வரை ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்படுகிறது.


யானைக்கு உதவுவது, விலங்குகளுக்கு நன்மை செய்வது என குழந்தைகளுக்கு நன்னெறி சொல்லிக் கொடுக்கும் பாடலாக, கதை வடிவில் இந்தப் பாடல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதற்கேற்றபடி ரஜினியும் கௌதமியும் ஐந்து குழந்தைகளுடன் காட்டுக்கு பிக்னிக் சென்று யானை, குரங்கு, குயில்கள், மான் என காட்டு விலங்குகளுடன் நடிப்பது போல் அனிமேஷனில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.




குழந்தைகள் தொடங்கு பெரியவர்கள் வரை பலருக்கும் விருப்ப பாடலாக இன்று வரை இப்படமும், இந்தப்பாடலும் விளங்கி வருகின்றன.


பாடல் உருவான விதம்


இந்நிலையில் இப்பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்யத் தகவல் முன்னதாக இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.


அதன்படி, ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் வெளியிட்டுள்ள பதிவில்,   “மனிதர்களையும் கார்ட்டூன்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட முதல் அனிமேஷன் படம்.


“ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்...” பாடலை விளக்கி, அனிமேஷன் செய்து தரும்படி கோரி மும்பையைச் சேர்ந்த சிறந்த கார்ட்டூனிஸ்ட்டான ராம்குமாரிடம் கோரப்பட்டது.


மறுத்த கார்ட்டூனிஸ்ட்... இயக்குநரின் விடாமுயற்சி


ஆரம்பத்தில் அவர் மறுத்துவிட்டார். ஏனென்றால் ஒரு முழு பாடலுக்கும் அனிமேஷன் செய்வது சாத்தியமில்லை என்று அவர் உணர்ந்து இருந்தார்.


 



எனினும் தன் கோரிக்கையை பரிசீலிக்குமாறு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கோரினார். இதற்காக மூன்று மாதங்கள் கூட அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும், குழந்தைகளுடன் பாடல் காட்சியை படமாக்குவதாகவும், அனிமேஷனை பின்னர் சேர்க்கலாம் என்றும் கூறினார்.


இறுதியாக இயக்குநரின் கோரிக்கையை ராம்குமார் ஏற்றுக்கொண்டார். மேலும் இந்தப் பாடலில் உள்ள ஆக்சன் காட்சிக்காக 84,000 கார்ட்டூன்களை அவர் வரைந்துள்ளார்.


கைகளால் வரையப்பட்ட கார்ட்டூன்


இன்று இதில் என்ன புதுமை என்று மக்கள் வியக்கலாம். ஆனால், இந்த ஒவ்வொரு காட்சியும் கைகளால் வரையப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டது” என அவர் பதிவிட்டுள்ளார்.


 






”நன்மை செய்தால் நன்மை விளையும், தீமை செய்தால் தீமை விளையும்” என்ற நன்னெறிக் கருத்தோடு குழந்தைகளுக்கான நீதிக்கதையாக உருவாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற இந்தப் பாடலின் பின் உள்ள வரலாறை அருணா குகன் பதிவாக பகிர்ந்துள்ள நிலையில், ட்விட்டரில் இவரது பதிவு லைக்ஸ்களையும் ரீட்வீட்களையும் அள்ளி வருகிறது.