கலைஞர் நினைவிடம் கனவு உலகம் மாதிரி உள்ளது என திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


சென்னை மெரினாவில் உள்ள அருகருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் முந்தைய அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டது. இதனிடையே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார். 


இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்துக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தது. இதனையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்   கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணி நிறைவு பெற்று நேற்று திறக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பெரிய அளவில் இல்லாமல் எளிமையாக கொண்டாடப்பட்டது. அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்படாத நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிறைவு நாள் உரை வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட கருணாநிதி நினைவிடத்தை நேற்று இரவு திறந்து வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் கருணாநிதி குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கூட்டணி கட்சியினர், நடிகர் ரஜினிகாந்த், சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருணாநிதி நினைவிடத்தில் “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருங்காட்சியகம்,கலைஞரின் எழிலோவியங்கள் என்ற பெயரில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு, கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வகையில் புத்தக விற்பனை நிலையம் என பல சிறப்பு வசதிகள் நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கலைஞர் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நினைவிட திறப்பு நிகழ்ச்சி ரொம்ப அருமையாக இருந்தது, அற்புதமாக இருந்தது. கலைஞரின் சமாதி என்று சொல்வதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். எல்லாமே சிறப்பாக இருக்கிறது. நினைவிடம் ஒரு கனவு உலகம் மாதிரி உள்ளது” என தெரிவித்தார். 




மேலும் படிக்க: Kalaignar Memorial: கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன்.. நெகிழ்ந்து ட்வீட் போட்ட வைரமுத்து