போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் பற்றி இயக்குநர் அமீர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் சோதனை மேற்கொண்டனர். இதில் கிட்டதட்ட 50 கிலோ எடை கொண்ட சூடோ பெட்ரின் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாகவே ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புக் கொண்ட போதைப் பொருளை தேங்காய் பவுடர் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தியுள்ளது தெரிய வந்தது. மேலும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ரூ.75 கோடி மதிப்பு கொண்டதாகும். 


இந்த கும்பலுக்கு தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  சென்னை புரசைவாக்கத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ஜாஃபர் சாதிக் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ள மங்கை என்ற படத்தை தயாரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அமீர் நடித்து வரும் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படியான நிலையில் தலைமறைவாக உள்ள ஜாஃபர் சாதிக் பற்றி அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், "மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.! கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.


கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.


எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.


அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்.  “இறைவன் மிகப் பெரியவன்” - அன்புடன் அமீர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக ஜாஃபர் சாதிக் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். அவர் மீது போதைப்பொருள் கடத்தியதாக புகார் எழுந்ததும்  கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததாக கூறி கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.