கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் கண்டு சிலிர்த்து விட்டதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு அரசியலில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி  வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதியின் உடல் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு பின்பக்கமாக நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். 


இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கருணாநிதியை பற்றி வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில்  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார். ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்  சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனை இன்று இரவு 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். இதற்காக தனியாக அழைப்பிதழ் எதுவும் அச்சிடப்படவில்லை. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘கருணாநிதி நினைவிடம் திறப்பு பற்றியும், அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனது உரை வழியாக அழைப்பு விடுக்கிறேன்’ என கூறினார். 






கருணாநிதி நினைவிடத்தில் “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் கலைஞர் உலகம் என்ற பெயரில் அருங்காட்சியகம், கலைஞரின் எழிலோவியங்கள் என்ற பெயரில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படத் தொகுப்பு, கலைஞர் புத்தக விற்பனை நிலையம் என பல வசதிகள் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


இதனிடையே கவிஞர் வைரமுத்து கருணாநிதி நினைவிடத்தை முழுமையாக பார்வையிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 


அதில்,


“கலைஞர் நினைவிடம்
 கண்டு சிலிர்த்தேன்


கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"


கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்


உலகத் தரம்

நன்றி தளபதி” என பதிவிட்டுள்ளார்.