பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தனக்கு மணிரத்னம் சான்ஸ் கொடுக்க மறுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர். மேலும் நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்ந்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி, இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்திய தேவன் கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும் என வார இதழ் ஒன்றின் மூலம் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் 'ரஜினிகாந்த்' என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்று தான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன் என ரஜினி தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தை முன்பே மணி பிளான் பண்ணும் போது பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சிங்கன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை என கூறினார். வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அது தான் மணிரத்னம் எனவும் தெரிவித்தார். அதேசமயம் பழுவேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது எனக்கு தோன்றியது.
பொன்னியின் செல்வனில் 40வது அத்தியாயத்தில் தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்த படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணி ரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என தெரிவித்த ரஜினி, இந்த கதையில் நந்தினி தான் எல்லாமே. அதனால் படத்திற்கு பொன்னியின் செல்வி என பெயர் வைத்து இருக்க வேண்டும். இதை வைத்து தான் படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம் உருவானது என்றும் ரஜினி தெரிவித்தார்.