கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.






மேலும், மதுரை, சிவகங்கை,  மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வைகை அணையில் இருந்து 7 மதகு கண் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  




 

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வைகை அணை மற்றும் நிலக்கோட்டை பேரணை ஆகிய அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் மதுரை வைகை ஆற்றில் 15,000 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், கால்நடைகளை ஆற்று பகுதிக்குள் அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. அற்றங்கரையோர சிம்மக்கல் தரை பாலம் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் இரு சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



 


 

இதனால் கோரிப்பாளையத்தில் இருந்து, சிம்மக்கல் நெல்பேட்டை செல்லும் ஏ.வி. மேம்பாலம் மற்றும் யானைக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் மேம்பாலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது தண்ணீரின் வேகம் குறைந்தாலும் கரையோரம் உள்ள சாலைகள் முடங்கியுள்ளதால் போக்குவரத்தி நெறிசல் குறையாமல் இருந்துவருகிறது. இன்று காலை 11 மணிக்கு வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் ஆற்றில் தண்ணீர் வேகம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர