பா.ரஞ்சித் இயக்கியதில் சிறந்த படம் ’நட்சத்திரம் நகர்கிறது’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் ஆகஸ்ட் 31ஆம் தெதி வெளியானது.
துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன், டான்சிங் ரோஸ் ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் ஆண் - பெண், தன்பாலின் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரின் காதல், அதன் பரிணாமங்கள், அதன் பின்னால் உள்ள அரசியல் என உரையாடல்களை நிகழ்த்தும் வண்ணம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
பா.ரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் சிறந்த படம் என ஒரு தரப்பினரும், கலாச்சார சீரழிவு, கம்யூனிசத்துக்கு பதிலாக அம்பேத்கரியத்தை முன்னிறுத்தும் படம் என வேறு சில தரப்பினரும் தொடர்ந்து இப்படம் குறித்து விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை முன்னதாகப் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் ரஞ்சித்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இயக்கம், ஒளிப்பதிவு, எழுத்து, கலை, இசை என அனைத்திலும் இதுவே உங்கள் சிறந்த படம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். உங்கள் பாராட்டி என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.
இதேபோல் கடந்த வாரம் இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்து பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், “நீங்கள் எடுத்ததிலேயே இதுதான் சிறந்த படம்” என்று ரஞ்சித்தைக் கட்டியணைத்துப் பாராட்டியதோடு, நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் நீரஜ் கெய்வான், “சினிமாவின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி எடுத்திருக்கும் வகையில், பா.ரஞ்சித்தின் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும்” என்று கூறியதோடு படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களையும் பாராட்டி இருக்கிறார்.