வேட்டையன்


ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் (Vettaiyan). ரஜினிகாந்தின் 170ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு  தற்போது நடைபெற்று வருகிறது.


ரஜினி அனிருத் காம்போ


ரஜினிகாந்த் படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் உள்பட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து பல மாஸ் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலத்தில் ரஜினி படங்களுக்கு சிறப்பான இசையை வழங்கி வருகிறார் அனிருத். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் முதன்முதலாக ரஜினி படத்தின் இசையமைத்தார் அனிருத். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் ஆகின. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்திற்கு இசையமைத்தார்.


கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தின் அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் பரவின. காவாலா முதல் ஹூக்கும் வரை ஒவ்வொரு பாடலும் அதற்கான ரசிகர்களைச் சென்றடைந்தது. தற்போது வேட்டையன் மற்றும் கூலி என அடுத்தடுத்து இரண்டு ரஜினி படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.






அனிருத் இசையில் வேட்டையன் படத்தின் பாடல் ஒன்று இறுதிகட்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாதில் மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு இந்த பாடல் படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரஜினி மற்றும் அனிருத் இருவரும் இணைந்து நடனமாடுகிறார்கள். ஷாட் முடிந்தது அனிருத் ரஜினிக்கு படக்குழுவினர் கைத்தட்டுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கூலி


சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினி. கடந்த மாதம் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், டைட்டிலில் இளையராஜாவின் ‘டிஸ்கோ’ பாடல் இடம்பெற்றது சர்ச்சையைக் கிளப்பி, இளையராஜா தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கோலிவுட்டில் இச்சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.