உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும்  உப்பின் அளவு அதிகமானால் பாதிப்பை சந்திக்கும் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


சென்னையில் செயல்படும் தனியார் மருத்துவமனையின் வெள்ளி விழா  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்றும், தனக்கிருந்த உடல் நலப்பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.


உப்பின் அளவு:


தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சில அறிவுரைகளையும் வழங்கினார். அவர் பேசும்போது, "நிறைய மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கும் என்றும், புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிப்படையும் என கூறினார். அதேபோல் துரித உணவுகள், நிறைய  எண்ணெயில் பொறித்த உணவுகள் சாப்பிட்டால் இதயம் பாதிக்கும். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும்  உப்பின் அளவு அதிகமானால் பாதிப்பை சந்திக்கும். அந்த அளவுக்கு உப்புக்கு பவர் இருக்கு.


இதற்காக நாம உப்பு குறைவா எடுத்துகிட்டாலும் தப்பு தான். என் வாழ்க்கையில நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். எனது மனைவி லதா ஒரு திருமணத்துக்கு சென்று திருமண விருந்தில் பங்கேற்றுள்ளார். அந்த உணவு சூப்பராக இருக்கவே யார் இந்த நிகழ்ச்சிக்கு சமையல்காரர் என விசாரித்திருக்கிறார். 


உடனே நாராயணன் என்பவர் பெயரை அனைவரும் சொல்லியிருக்கிறார்கள். அந்நேரம் பார்க்க எனது வீட்டு சமையல்காரருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. உடனே நாராயணனிடம் சென்று, எங்க வீட்டுக்கு சமையல்காரராக வர்றீங்களா?  என்று லதா கேட்டார். ‘கரும்பு சாப்பிட கூலியா வேண்டும்’ அப்படிங்கிற மாதிரி அவரும் வீட்டுக்கு வந்துவிட்டார்.  சூப்பராகவும் சமைத்தார். அடடே செம டேஸ்ட். அந்த மாதிரியான சுவையை நான் வாழ்க்கையில அனுபவிச்சதே இல்லை. நாங்களும் நன்றாக சாப்பிட்டு கொண்டு இருந்தோம். அதேசமயம் எனக்கும், என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் ஏறிக்கிட்டே இருந்துச்சு. 


டென்ஷனான நண்பர்:


உடனே டாக்டர்களிடம் சென்று சிகிச்சையும் எடுத்தோம். ஆனாலும் ரத்தம் அழுத்தம் குறையவே இல்லை. மேலும் எகிறிக்கொண்டே தான் இருந்தது. ஒருமுறை நண்பர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டார்.  சாப்பாடு எப்படி இருக்கிறது?  என்று கேட்டேன். உடனே அவர், என்ன  சாப்பாட்டில் இவ்வளவோ உப்பு இருக்கு. இவ்ளோ எண்ணெய் இருக்கு. எப்படி  சாப்பிடுறீங்க என கேட்டு டென்ஷனாகி விட்டார்.


அய்யோ, அப்ப நம்ம வருஷம் முழுவதும் இதைத்தானே சாப்பிடுகிறோம் என அதிர்ச்சியாகி உடனே அனைத்தையும் மாற்றினேன். அதன்பிறகே இரத்த அழுத்தம் குறைந்தது. அதுமாதிரி நீங்களும் கவனமாக இருங்க. உப்பு அதிகம் சாப்பிட்டால்  அதுவே பழகிவிடும் என தெரிவித்தார்.