இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர் முகம்மது ஷமியை பார்த்து மத ரீதியிலான கோஷங்களை எழுப்பிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் டெஸ்ட்:
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதனிடையே 4வது டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 9 ஆம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியும் முதல் அரை மணி நேரம் கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியில் இதுவரை 3 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் சதத்தால் 480 ரன்கள் குவித்தது. இதனிடையே இந்த போட்டியை காண 2வது நாள் அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர். அன்றைய தினம் முதல் இன்னிங்ஸ் முடிந்து இந்திய வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.
ஷமிக்கு எதிராக ஜெய்ஸ்ரீராம் கோஷம்:
அப்போது ரசிகர்கள் வீரர்களின் பெயரை சொல்லி அழைத்து மகிழ்ந்தனர். மேலும் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் எனவும் தொடர்ச்சியாக கோஷமிட்டபடி இருந்தனர். அப்போது அங்கு முகம்மது ஷமி வந்தார். அவரைப் பார்த்து "ஷமி, ஜெய் ஸ்ரீராம்" என்று ரசிகர்கள் கத்தினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. அடிப்படையில் இஸ்லாமியரான ஷமியைப் பார்த்து இப்படியான மத ரீதியிலான கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதம்,இனம் ,மொழி, கலாச்சாரம் போன்றவற்றால் வேறுபட்டு இருக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் உந்து சக்திகளில் ஒன்றாக விளையாட்டு உள்ளது. ரசிகர்கள் வீரர்களின் திறமை, விளையாடும் போக்கு பற்றி விமர்சிக்க வேண்டுமே தவிர இதுபோன்ற மதம், இனம்,நிறம், உருவகேலியிலான விமர்சனங்களை விளையாட்டில் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிருப்தி:
அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து ஆடி வருகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்திய அணியில் ஒற்றுமையுடன் வீரர்கள் ஆடி வரும் சூழலில், சமீபகாலமாக மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை டி20 தோல்வியின்போதும் முகமது ஷமிக்கு எதிராக இதுபோன்ற அவதூறான தாக்குதல் இணையத்தில் சில மோசமான ரசிகர்களால் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.