கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி டாஸ்மாக் கடை முன்பு  மர்மமாக இறந்து கிடந்தவரின் மரணம் தொடர்பாக இருவரை லாலாபேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 




 


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கடந்த மார்ச் 9ம் தேதி அதிகாலையில் குன்னுடையான்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் தலை மற்றும் காலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நவாஸ் மற்றும் அவரது நண்பர் பழைய ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி ஆகிய இருவர் சம்பந்தப்பட்ட உள்ளதாக தெரியவந்ததையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


இதில் நவாஸ், கருப்பசாமி, இறந்த ராஜீவ்காந்தி அவரது மனைவி ஆகிய நான்கு பேரும் கரூரில் உள்ள தனியார் கொசுவலை கம்பெனியில்  வேலை பார்த்து வந்துள்ளனர். ராஜீவ்காந்தியின் மனைவிக்கும் நவாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அவ்வாறு உல்லாசமாக இருந்ததை நவாஸ் படமாக எடுத்துக் கொண்டு ராஜீவ்காந்தியின் மனைவியை தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதை அறிந்த ராஜீவ்காந்தி தனது மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறவே அவர் வேலையை விட்டு நின்று உள்ளார்.


 




கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில் நவாஸ், ராஜீவ்காந்தி வேலைக்குச் சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவியுடன் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.


ராஜீவ்காந்தி உயிருடன் இருப்பதால் தான் தனக்கு தொந்தரவாக உள்ளதாக நினைத்த நவாஸ், தனது நண்பர் கருப்பசாமி உதவியுடன் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி இரவு நவாஸ் தனது நண்பர் கருப்பசாமி மூலம் பேசுவதற்காக வேலைக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய ராஜீவ்காந்தியை தொலைபேசி வாயிலாக பேசுவதற்காக அழைத்துள்ளார்.


இதனை நம்பி சென்ற ராஜீவ்காந்திக்கு இருவரும் மதுபானம் வழங்கி குடிக்க சொல்லி அவர் மது போதையில் இருக்கையில் கழுத்தை நெறித்தும்,  தலையில் தாக்கியும் அவரை கொன்றுள்ளனர். பின்னர் அதிகாலையில் அவரது உடலை நவவாஸின் இருசக்கர வாகனத்தில்  கொண்டு வந்து பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். போலீசார் விசாரணையில் இவர்கள் ஏற்கனவே ராஜீவ்காந்தியிடம் பிரச்சனை செய்துள்ளதாகவும் அது குறித்து பேச அழைத்துள்ளதாகவும் உறவினர்கள் கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரையும் போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


 




 


இதில் அவர்கள் தாங்கள் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.