சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவருக்கு கட் அவுட் வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ஆம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார். இதனிடையே ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.
இமயமலை புறப்பட்டார் ரஜினி
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டார். இன்று காலை 8 மணி அளவில் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்’ என்றார். ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள்’ என்றார்.
ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார். ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் வீடியோ வெளியீடு
ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். காஷ்மீரில் என் படத்தோட ஷூட்டிங் இரவு, பகலா போய்கிட்டு இருக்கதால இந்த வீடியோ தாமதமாக வெளியிடுறேன். மாவீரன் படம் வெற்றிகரமாக 25வது கடந்து ஓடிகிட்டு இருக்கு. இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, பாராட்டு தெரிவித்த அனைத்து பிரபலங்களின் ரசிகர்கள், அனைத்து மாநில ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாவீரன் படம் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்தார். இது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் உற்சாகமாக இருந்தது. குறிப்பாக எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சு. என்கிட்ட ரஜினி, “சிவா ரொம்ப சிறப்பா இருந்துச்சு. நீங்க சிறப்பா நடிச்சிருந்தீங்க. கதை வித்தியாசமா இருந்துச்சு. நீங்களும் வித்தியாசமா தான் கதை பிடிக்கிறீங்கல” என சொன்னார். எனக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு. ரொம்ப நன்றி தலைவா". இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.