நாகை மாவட்டத்தில் மீனம்ம நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருக தொடங்கியுள்ளன. இதனால், ராட்சத டீசல் மோட்டார் மூலம் வாய்க்கால் குட்டைகளில் இருந்து விவசாயிகள் தண்ணீரை பாய்ச்சுகின்றனர்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில், ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு லட்சகணக்கான விவசாயிகள் நிகழாண்டு சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், மேட்டூர் அணைக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. இதேபோன்று கர்நாடக அணையிலும் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கவேண்டிய 40 டிம்.சி. காவிரி நீர் வழங்கப்படவில்லை.

 

மேட்டூர் அணையிலிருந்து திறறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகை  முழுமையாக சென்றடையவில்லை. இதனால் இம்மாவட்டங்களில் விவசாயிகள் செய்திருந்த நேரடி நெல் விதைப்பு 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கருகி முளைப்பு தன்மையை இழந்துள்ளது. இதேபோன்று கிடைத்த தண்ணீரை கொண்டு நாற்று விட்டவர்கள், அவ்வபோது பெய்த மழையில் முளைத்த நெற்பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகிறது. தண்ணீர் வந்துவிடும், கருகும் பயிர்களை காப்பாற்றி விடலாம் என எதிர்பாத்த விவசாயிகளுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.



 

டெல்டா விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகும், தண்ணீர் வாய்க்காலை எட்டிப்பார்க்கிறதே தவிர வயல்களுக்கு செல்ல மறுக்கிறது. கருகும் குறுவை நெற்பயிர்களால் ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 58 நாள்கள் கடந்த நிலையில், தற்போது 60 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் குறுவை சாகுபடிக்கே போதுமானதாக இருக்காது என விவசாயிகள் கூறுகின்றனர்.

 

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரின் நிலவரப்படி, நடைபெற்று வரும் குறுவை சாகுபடி மற்றும் நடைபெறவுள்ள சம்பா சாகுபடி நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 

 

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு முளைத்த பயிர்கள் 40 முதல் 45  நாட்களை கடந்துள்ளது. இதுவரை கடை மடை பகுதியான மீனம்பநல்லூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் வரவில்லை.

 

கருகும் குறுவை பயிர்களை வாய்க்கால் மற்றும் குளங்களில் உள்ள தண்ணீரை எடுத்து ஊற்றியும் டீசல் பம்பு செட் மூலம் தண்ணீர் இறைத்து காப்பாற்ற முயன்றோம். ஆனால் முடியவில்லை, குளங்களில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. எங்களால் போராடுவதற்கு முடியவில்லை. கருகிய குருவைப் பயிர்கள் வைக்கோலாக மாறி வருகிறது.



 

இதனால் நெற்களஞ்சியமான டெல்டாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கினால் மட்டுமே நிகழாண்டு காவிரி டெல்டாவில் குறுவையைக் காப்பாற்றவும் சம்பா சாகுபடி பணி தொடங்க முடியும் எனக்கு ஒரு விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு காப்பீடு இல்லாத நிலையில் உடனடியாக தமிழக அரசு முன்வந்து காப்பீடு செய்ய வேண்டும். மேலும் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசிடமிருந்து, தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை தண்ணீர் பெறுவது தான் ஒரே வழி.

 

தற்போது கருகும் குறுவை நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிற்கு  அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.