தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர்ஆடுகளம் முருகதாஸ் நடித்த ’ராஜாமகள்’ திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. சென்ற மார்ச் 17ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதன் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அப்பா - மகள் உறவை நேர்த்தியாக வெளிப்படுத்தும் திரைப்படமான ராஜாமகள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
நடிகர் ஆடுகளம் முருகதாஸ், பேபி பிரித்திக்ஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹென்றி ஐ எழுதி இயக்கிய இந்தப்படத்தில் நடிகை வெலினா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மூன்வாக் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஷங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளனர்.
கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட ராஜாமகள் திரைப்படம், தன் மகள் கண்மணியின் (குழந்தை பிரதிக்ஷா) ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மதியின் (ஆடுகளம் முருகதாஸ்) வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
கண்மணி தன் பள்ளித் தோழியின் பிரமாண்டமான வீட்டின் அழகில் ஈர்க்கப்பட்டு, மதியை (ஆடுகளம் முருகதாஸ்) அதேபோன்ற ஒரு வீட்டை வாங்கும்படி கட்டாயப்படுத்துகிறாள். மகளின் கனவை ஏமாற்ற விரும்பாத தந்தை மதி, வீடு வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறார். இறுதியில் மதி தன் மகளுக்கு வீடு வாங்கிக் கொடுக்கிறாரா என்பது மீதிக்கதை. மேலும், கண்மணி தன் தந்தையின் கஷ்டங்களையும் வலியையும் புரிந்து கொள்ள அடுத்தடுத்து படத்தில் நிகழும் திருப்பங்கள் என்ன என்பதையும் இந்தப் படம் பேசுகிறது.
இத்திரைப்படத்தை பற்றி பேசிய இயக்குநர் ஹென்றி ஐ, “ராஜா மகள் திரைப்படத்தின் ஒளிப்பதிவும் இசையும் சொல்ல வேண்டிய கதையை கச்சிதமாக அமைத்து ,பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
தமிழ் குடும்பங்களின் பாரம்பரிய தினமான தமிழ் புத்தாண்டில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தத் திரைப்படம் ஒளிபரப்பாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் நிச்சயமாக பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.