ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 13வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் தொடங்கியது. கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் சென்னை, டெல்லி, மும்பை, குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை 12 போட்டிகள் நடந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் ஏறக்குறைய 2 போட்டிகளில் விளையாடி விட்டது.
இதனிடையே இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் அணியின் உள்ளூர் மைதானமான அஹமதாபாத் மோடி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது.
இந்த சீசனில் வெற்றி, தோல்வி:
கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இதேபோல் அசுர பலம் கொண்ட குஜராத் அணி தனது முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறது. மேலும் இன்றைய போட்டி உள்ளூர் மைதானமாக இருப்பது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாகும்.
கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக கொல்கத்தா வீரர் ஷர்துல் தாகூர் கடைசிக் கட்டத்தில் 29 பந்துகளுக்கு 68 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோல் அந்த அணி குறைந்த ரன்களில் பெங்களூருவை வீழ்த்தியது. இதனால் கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியை தொடர இரு அணிகளும் முயலும்.
இதுவரை நேருக்கு- நேர்:
கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும், குஜராத் அணியும் முதல் முறையாக மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ரஸல் அதிகப்பட்சமாக 48 ரன்கள் விளாசினார். குஜராத் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 67 ரன்கள் குவித்தார். அதனால் அந்த தோல்விக்கு இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பழிதீர்க்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்)
குஜராத் அணி: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
கொல்கத்தா அணி: நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி