கோலிவுட் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் அட்லீ, பாலிவுட் திரையுலகிலும் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இப்படத்தை அவரே தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


ஆயிரம் கோடி வசூலித்த முதல் தமிழ் இயக்குநர்!


கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான 'ஜவான்' திரைப்படம், மாஸான வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் வேட்டையாடி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலைக் குவித்து 1000 கோடி கிளப்பில் இணைந்து தூள் கிளப்பியுள்ளது. 


இதுவரையில் அட்லீ கொடுத்த ஐந்து திரைப்படங்களும் மரண மாஸ் ஹிட் அடித்த பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக வெற்றி பெற்றுள்ளன. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அவரின் படம் இயக்கும் ஸ்டைல் எப்போதுமே வித்தியாசமான திரைக்கதையுடன் பார்வையாளர்களை படம் முழுக்க எண்டர்டெயின்மெண்ட் செய்யும் வகையில் அமைவது ஒரு பிளஸ் பாயிண்ட். 


 



அப்படி அட்லீ இயக்கிய திரைப்படங்கள் இதுவரை எத்தனை கோடிகள் வசூலித்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.


ராஜா ராணி (2013) : 


ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமான அட்லீ இயக்கிய இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், சத்யராஜ், சந்தானம்  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் காமெடி கலந்த செண்டிமெண்ட் காதல் படம். இப்படம் இன்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன. அட்லீயின் முதல் படமான ராஜா ராணி, பாக்ஸ் ஆபிசில் ரூ.80 கோடி கோடி வசூலித்தது எனக் கூறப்படுகிறது.



தெறி (2016) : 


கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய், சமந்தா, ராதிகா, எமி ஜாக்சன், பேபி நைனிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட். அட்லீயின் இரண்டாவது படமான தெறி பாக்ஸ் ஆபிசில் ரூ.155 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 


மெர்சல் (2017) :


இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் அட்லீ கூட்டணி சேர்ந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படம் சுமார் ரூ.255 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 


பிகில் (2019) :


கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான பிகில் படம் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்தார் அட்லீ. நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படம் சுமார் 310 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ததது.


தொடர்ச்சியாக நான்கு பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த அட்லீ, பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது ராஜாங்கத்தை நிலை நிறுத்தியுள்ளார். ஜவான் படம் மூலம் உலகெங்கிலும் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளார் அட்லீ. இந்த வெற்றிக்குப் பிறகு அவரின் மார்க்கெட் மூன்று மடங்காக எகிறிவிட்டது என்கிறனர் சினிமா வட்டாரத்தினர்!