மறைந்த நடிகர் விஜயகாந்த் குடும்பத்துக்கு உதவி செய்யும் பொருட்டு தான் செய்யப்போகும் உதவியை நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 


நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவை தொடர்ந்து விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட தேமுதிக தலைமைக்கழக அலுவலகம் மற்றும் விஜயகாந்த் இல்லத்திற்கு பிரபலங்கள் பலரும் சென்று வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸூம் தனது அஞ்சலியை நேரில் சென்று செலுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “எல்லாருக்கும் வணக்கம். நேற்று முன்தினம் நானும், எங்க அம்மாவும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்றிருந்தோம். அப்படியே அவரின் வீட்டுக்கு சென்றோம். அங்கு விஜயகாந்தின் மனைவி, இரு மகன்கள், சுதீஷ் உள்ளிட்ட எல்லாரும் இருந்தாங்க. நாங்க எல்லாரும் உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். அப்போது பிரேமலதாவின் சகோதரி சண்முக பாண்டியனை பார்த்து என்னிடம்,‘தம்பி ஹீரோவாக பண்ணிகிட்டு ஒருக்காங்க. நீங்க எல்லாரும் தான் பார்த்துக்கணும்’ என சொன்னார்கள். அந்த வார்த்தையை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. விஜயகாந்த் சார் எத்தனையோ பேருக்கு, ஹீரோக்களுக்கு உதவி பண்ணியிருக்காரு. எத்தனையோ தர்ம காரியங்கள் பண்ணியிருக்காரு. அதனால் அந்த அம்மா நீங்க எல்லாரும் தான் பார்த்துக்கணும் என சொன்னது ஒரு மாதிரி இருந்தது. அந்த பசங்களுக்கு ஏதோ ஒன்று பண்ண வேண்டும் என தோன்றியது. 


விஜயகாந்த் நிறைய ஹீரோக்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். சண்டை, பாடல்களில் நடித்திருந்தார். மற்றவர்களை வளர்த்து விடுவதில் அவருக்கு ரொம்ப சந்தோசம் இருந்தது. அதேமாதிரி நானும் அவரின் கண்ணுப்படப்போகுதய்யா படத்தில் இடம்பெற்ற  “மூக்குத்தி முத்தழகு” பாடலுக்கு நடனம் அமைத்திருந்தேன். அப்படியாப்பட்ட குடும்பத்தில் இருக்கும் பசங்களுக்கு, இவ்வளவு ஹெல்ப் பண்ண மனிதருக்கு நம்ம ஏதாவது பண்ண வேண்டும் என தோன்றியது. 






அந்த அம்மா சொன்னா மாதிரி, நான் விஜயகாந்த் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் விதமாக தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சண்முக பாண்டியன் படம் ரிலீசாகும்போது, அந்த படத்துக்கு எவ்வளவு முடியுமோ ப்ரோமோஷன் பண்ணி கொடுக்கணும். மேலும் படக்குழுவினர் ஒப்புக் கொண்டால் அவர் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நான் ரெடியாக உள்ளேன். அது சண்டை, காட்சி, பாடல் என்ன வேண்டுமோ நான் செய்கிறேன். எத்தனையோ பேரை வளர்த்துவிட்ட விஜயகாந்தின் மகன் வளர்வதை நாம் காண வேண்டும். அதுதான் நாம் அவருக்கு செய்யும் தர்மமாகும். யாராவது இரண்டு ஹீரோக்கள் கதை இருந்தால் சொல்லுங்கள். நானும் சண்முக பாண்டியனும் இணைந்து நடிக்கிறோம். அதேபோல் விஜய பிரபாகரன் அரசியலில் இருக்காரு. அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.