நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவரின் சினிமா கேரியரில் பொங்கல் வெளியீடாக ரிலீசான படங்களின் நிலை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். 


புதுக்கோட்டையிலிருந்து சரவணன்


2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியதாக இருந்தாலும் அவரின் முதல் பொங்கல் வெளியீடாக வெளியான படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தான். 2004 ஆம் ஆண்டு வெளியான எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கிய இந்த படத்தில் அபர்ணா பிள்ளை, கருணாஸ்,பீட்டர் ஹெயின், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. 


படிக்காதவன்


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தான் தனுஷின் படம் ஒன்று பொங்கல் பண்டிகையில் வெளியானது. அது விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட படிக்காதவன் படம். சுராஜ் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், தமன்னா, விவேக், சுமன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இப்படம் தனுஷூக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. 


குட்டி


2010 ஆம் ஆண்டு தன்னை வைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹருடன் தனுஷ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த குட்டி படம் வெளியானது. இந்தப் படத்தில் ஸ்ரேயா, தியான், ராதா ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காதல் காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை கவர தவறியது. 


ஆடுகளம்


பொல்லாதவன் படத்துக்குப் பின் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறனுடன் இரண்டாவது முறையாக தனுஷ் இணைந்த படம் தான் ஆடுகளம். இந்தப் படத்தில் டாப்ஸி, நரேன், கிஷோர், வி.ஐ.எஸ்.ஜெயபாலன், முருகதாஸ், மீனாள் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் தனுஷின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். பொங்கல் வெளியீடாக ரிலீசான ஆடுகளம் படம் 58 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், இயக்கம்,திரைக்கதை,எடிட்டிங், ஒளிப்பதிவு. நடுவர் சிறப்பு விருது என ஆறு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.


பட்டாஸ்


2020 ஆம் ஆண்டு கொடி படத்துக்குப் பின் இயக்குனர் துரை செந்தில்குமாருடன் தனுஷ் இரண்டாவது முறையாக இணைந்த படம் தான் பட்டாஸ். இந்தப் படத்தில் சினேகா, மெஹரின் பிர்தசா, நவீன் சந்திரா என பலர் நடித்திருந்தனர் விவேக் மெர்வின் இசையமைத்த இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இதில் சொல்லப்பட்ட அடிமுறை என்னும் தற்காப்பு கலை பெரும் வரவேற்பை பெற்றது.