கடவுளுக்கு மிகவும் நெருக்கமான இடமாக கருதப்படும் கேரளாவின் மிகப்பெரிய ஒரு பரிசு கே.ஜே. யேசுதாஸ். 'கான கந்தர்வன்' என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் யேசுதாஸ். மலையாளம், தமிழ்,  தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், குஜராத்தி, அரபி, ரஷ்ய மொழி மற்றும் பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள மாய குரலோன். 


 




ஐயப்பனுக்கு தாலாட்டு : 


இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான யேசுதாஸ், நித்தமும் சபரிமலையை ஐயப்பனை மட்டுமல்லாமல் இந்த உலகத்தையே தனது 'ஹரிவராசனம்' பாடல் மூலம் தாலாட்டுபவர். இப்படி பட்ட ஒரு வரம் எத்தனை பேருக்கு அமையும். அத்தனை பாக்கியம் பெற்ற ஒரு இசைக்கலைஞன் தனது உணர்ச்சிகளை பாடல் வரிகள் மூலம் பாய்ச்சி கேட்போரின் கண்களில் கண்ணீரை வழிய வைக்க கூடியவர். 


குரலின் தனித்துவம் : 


60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கலை சேவையை செய்து வரும் இந்த வித்தகர்க்கு 8 முறை தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு. அது மட்டுமின்றி பத்மஸ்ரீ, பத்ம பூஷண் , பத்ம விபூஷண் என பல கௌரவங்கள் அவரின் மகுடத்தை மேலும் அலங்கரித்தன. அவரின் குரலில் இருக்கும் அந்த இனிமை, குளிர்ச்சி, மலர்ச்சி, குழைவு,நெகிழ்வு, உருக்கம், உற்சாகம் அனைத்தும் கேட்போரை அப்படியே காந்தம் போல கவர்ந்து இழுத்து விடும் ஆற்றல் கொண்டது. 


வசீகர குரலோன் : 


யேசுதாஸ் குரலில் மெலடி பாடல்களை கேட்டால் அது அப்படியே ரசிகர்களின் மனங்களை மயிலிறகால் வருடும். அதே சமயம் அவரின் குரலில் சோக காவியத்தை கேட்கையில் அது இதயத்தை அப்படியே இளகி கண்களை குணமாக்கிவிடும். தன்னுடைய வசீகரமான குரலால் உணர்ச்சி  வெள்ளத்தை பொங்க வைத்து மெய் சிலிர்க்க வைக்க கூடிய காந்த குரலுக்கு சொந்தக்காரர் யேசுதாஸ். யேசுதாஸின் ரம்மியமான குரலில் எந்த பாடலை கேட்டாலும் காதுகளில் தேன் பாய்வது போல அத்தனை இனிமையாக இருக்கும். மனதை கனக்கும் அளவுக்கு சொல்ல முடியாத வேதனையாக இருந்தாலும் அவரின் தாலாட்டை கேட்டால் மனது அப்படியே இளகி லேசாகிவிடும். 


 



யேசுதாஸ் குரலில் தெய்வீக பாடல்களை கேட்கும் போது அந்த இடமே பத்தி பரவசத்தால் நிரம்பி வழிந்து மனதில் அமைதியை ஏற்படுத்தும். கர்நாடக இசை, திரை இசை என அனைத்து பாடல்களையும் பெரும் சிரத்தையோடு பாடக்கூடியவர். அவர் 50 ஆயிரம் பாடல்கள் பாடி இருந்தாலும் ஒரு பாடல் கூட அதிரடியான பாடல்களாக இருக்காது என்பது தான் அவரின் தனிச்சிறப்பு. எளிதில் உணர்ச்சிவசப்பட கூடிய யேசுதாஸ் சில சமயங்களில் பாடல் வரிகளில் இருக்கும் அழுத்தம் தாங்காமல் தேம்பி தேம்பி அழுத நிகழ்வுகளும் உள்ளன.


தமிழ் சினிமா அறிமுகம் : 


வீணை எஸ்.பாலசந்தர்  இயக்கத்தில் வெளியான 'பொம்மை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீயும் பொம்மை நானும் பொம்மை' பாடல் தான் தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் திரைப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை ஜாம்பவான் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   அவருக்கு திரை பிரபலங்கள், இசை கலைஞர்கள் மற்றும்  எண்ணற்ற ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள். ஹாப்பி பர்த்டே யேசுதாஸ்..!