இந்த ஆண்டு கோலிவுட்டில் வெளியான திரைப்படங்களில் பலரின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில்  மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் நடித்து அசத்தியிருந்தனர். பார்வதி (படத்தில் செங்கேனி)  என்னும் பழங்குடி பெண்ணிற்கு நடந்த அவலங்களையும் , அந்த பெண்ணிற்கு  உதவிய நீதி அரசர் சந்திருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஜெய் பீம் உருவாகியிருந்தது. இந்நிலையில் யூடியூப் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பார்வதி தனது அவலநிலை குறித்து தெரிவித்திருந்தார். தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வரும் பார்வதிக்கு சொந்தமாக வீடு கூட இல்லை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தனர். 




படத்தில் சில சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இருந்தாலும் கூட பார்வதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் கூடுதல் வேதனையாகத்தான் இருக்கிறது. காலங்கள் கடந்தாலும் பார்வதி அம்மாள் நேற்று நடந்தது போல அனைத்தையும் மறக்காமல் தெரிவிக்கிறார். அந்த அளவிற்கு அவர் பட்ட துயரின் தாக்கம் இன்னமும் இருக்கிறது போலும். என்னதான் படம் எடுத்தாலும், தமிழகமே ராஜக்கண்ணுவிற்கு நடந்த அவலத்தை சமூக வலைத்தளங்களில் பேசினாலும்  கூட தங்களின் நிலை அப்படியாகத்தான் இருக்கிறது என்கிறார் பார்வதியின் மருமகன்.





இந்த நிலையில் நடிகரும் , இயக்குநருமான ராகவா லாரஸ் பார்வதி அம்மாளுக்கு சொந்தமாக வீடு கட்டித்தருவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் “செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள். 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை,இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு.த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.” என குறிப்பிட்டுள்ளார்.