சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் 'கிழக்கு வாசல்'. இந்த புதிய சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். மேலும் ஒரு சர்ப்ரைஸாக இந்த சீரியலில் நடிக்க உள்ளார் பிரபலமான திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர். 


 



பெண்களின் ரோல் மாடல் :


வெள்ளித்திரையில் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் அறிமுகமான ராதிகா சரத்குமார் ஏராளமான திரைப்படங்களில் வெரைட்டியான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் முத்திரை பதித்தவர். சித்தி, அண்ணாமலை, வாணி ராணி, செல்வி என ஏராளமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர். பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குபவர் நடிகை ராதிகா சரத்குமார். 


மீண்டும் சின்னத்திரையில்: 


தற்போது நடிகை ராதிகா சரத்குமார், ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில காரணங்களால் அவர் நடித்து வந்த சித்தி 2 சீரியலில் இருந்து விலகிய ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது 'கிழக்கு வாசல்' என்ற இந்த புதிய சீரியலின் மூலம் மீண்டும் அவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுப்பது அவரது ரசிகர்களுக்கு பேரானந்தத்தை கொடுத்துள்ளது. இந்த சீரியலில் அவர் இரண்டு பெண்களுக்கு தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. 


 



 


விஜய் டிவியில் ராதிகா சீரியல் :


பொதுவாக ராதிகா நடிக்கும் சீரியல்கள் சன் டிவியில் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த முறை 'கிழக்கு வாசல்' சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை சோசியல் மீடியா மூலம் வெளியிட்டுள்ளார் ராதிகா சரத்குமார். மேலும் இந்த சீரியலின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த சீரியலில் ராதிகா சரத்குமார், எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் சஞ்சீவ், ஆனந்த் பாபு, ரேஷ்மா முரளிதரன் மற்றும் பல சின்னத்திரை நடிகர்கள் நடிக்கிறார்கள். தனது விருப்பமான நடிகையை சின்னத்திரை மூலம் தினசரி டிவியில் பார்க்க போவதை நினைத்து பூரிப்பில் இருக்கிறார்கள் ராதிகா ரசிகர்கள்.