Raayan Second Single: தனுஷின் 50ஆவது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான வாட்டர் பாக்கெட் வெளியாகியுள்ளது. 


வட சென்னை கதைக்களம்


தனுஷ் இயக்கி,  நடிக்க அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷண், துஷாரா விஜயன், அபரணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ராயன். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார். 


வட சென்னையில் வசிக்கும் மூன்று சகோதரர்கள், கேங்ஸ்டர் கதைக்களம் என இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 


 சந்தோஷ் நாராயணன் குரலில் ‘வாட்டர் பாக்கெட்’


தனுஷ் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது முறையாக ராயன் படத்தின் மூலம் இணைந்துள்ளார். முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 


இந்நிலையில் தற்போது ராயன் படத்தின் இரண்டாவது பாடலான வாட்டர் பாக்கெட் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் - பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாட்டியுள்ளார். சந்தீப் கிஷண் - அபர்ணா பாலமுரளி ஜோடியின் காதல் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ள நிலையில் தனுஷ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா ஆகியோர் குடும்பமாக இணைந்திருக்கும் காட்சிகளும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.


 



சென்னை தமிழில் ரகளையாக அமைந்துள்ள இந்தப் பாடலை கானா கதர் எழுதியுள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் குரல் இப்பாடலுக்கு பக்கபலமாக அமைந்துள்ளதாகவும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் பாடிய தேன்மொழி பாடலைப் போல் இந்தப் பாடலும் ஹிட் அடிக்கும் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தள்ளிப்போகும் இசை வெளியீட்டு விழா?


இந்நிலையில் தனுஷின் 50ஆவது படம் என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஜூன் 1ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருப்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராயன் இசை வெளியீட்டு விழாவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!


Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!