Saamaniyan Movie Review: தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகராக கொடிகட்டிப் பறந்த கதாநாயகன் ராமராஜன். வசூலில் அவர்களுக்கு நிகரான சக்கரவர்த்தியாக எம்.ஜி.ஆர். பாணியில் தனது படங்களில் மது, சிகரெட் காட்சிகளை தவிர்த்து வந்தவர்.


ராமராஜனின் சாமானியன்:


தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்து வந்தவர் 2000த்திற்கு பிறகு சினிமாவை விட்டே பெரிதும் விலகிவிட்டார். 2012ஆம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்த பிறகு சுமார் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஒரு காலத்தில் சாமானியர்களின் நாயகனாகவே மக்கள் மனதில் குடியிருந்த ராமராஜனை மீண்டும் சாமானியர்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளதா ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படம் என்பதைக் காணலாம். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ராம்கோபி எடிட் செய்துள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளனர்.




ஒரு காலத்தில் டூயட், ஹீரோயின் என்று அசத்தியவர் காலத்திற்கேற்ப மாறி தன் வயதிற்கேற்ப கதையைத் தேர்வு செய்ததில் முதலில் ராமராஜனுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கலாம். மதுரையில் இருந்து தனது நண்பர் எம்.எஸ்.பாஸ்கருடன் ஊருக்கு வரும் ராமராஜன், சென்னையில் பிரபல வங்கி ஒன்றின் உள்ளே ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுடன் சென்று வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறார். அவருக்கு அவரது கிராமத்து நண்பரான எம்.எஸ்.பாஸ்கரும், சென்னையில் உள்ள நண்பரான ராதாரவியும் உதவி செய்கின்றனர்.


கதை என்ன?


கிராமத்து நபரான ராமராஜன் ஏன் வங்கிக்குள் சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுடன் சென்றார்? இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வங்கியை ஏன் கொண்டு வந்தனர்? இவர்களுக்கும் வங்கிக்கும் என்ன பிரச்சினை? வங்கிக்கு உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் கதி என்ன? என்பதே படத்தின் கதை.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றிய ராமராஜனின் தொடக்கக் காட்சியில் அவரது “மதுரை மரிக்கொழுந்து” பாடலுடன் அவர் என்ட்ரீ கொடுக்கும் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்தது. ராமராஜன் தனது தொடக்க காலம் முதலே தனது படங்களில் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்வதில் தவறாமல் இருந்து வருகிறார். உணவு, கழிவறை வசதிக்காக பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தின் அவல நிலையை தொடக்கக் காட்சியிலே காட்டிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


ராமராஜன் யார்?


படத்தின் செட் சில இடங்களில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று எண்ண வைத்திருந்தது. குறிப்பாக, கமாண்டோக்கள் வந்திறங்கும் அந்த ஜீப் யதார்த்தத்திற்கு ரொம்ப அந்நியமாகவே இருந்தது. அழகர், திவ்யா பணிபுரியும் அலுவலகம், வங்கியின் சில பகுதிகள், வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ராமராஜனுடன் காவல்துறை அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் சமரசம் பேசும் காட்சிகளை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம்.


படத்தின் முதல் பாதி பெரிய தொய்வுகள் ஏதுமில்லாமல் நன்றாகவே செல்கிறது. குறிப்பாக, முதல் பாதியில் பாடல்கள் ஏதும் தடைக்கற்களாக இல்லை. இடைவேளைக்கு முன்பு ராமராஜன் யார் என்பதை சொல்லும் காட்சி படத்தின் இரண்டாம் பாதி மீது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.


இரண்டாம் பாதியில் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய காட்சி, இளவயது ராமராஜனை கார்ட்டூன் கதாபாத்திரம் வழியே காட்டியதே ஆகும். விக்ரம் படத்தில் கமல்ஹாசனை காட்டியது போல இந்தக் காட்சியில் காட்டியிருக்கிறார்கள். இந்க்த காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டி அசத்தியிருந்தனர். இரண்டாம் பாதி படம் முழு குடும்பப் படமாக மாறி நிற்கிறது.


தடை இதுதான்:


ப்ளாஷ்பேக் காட்சியில் ராமராஜனின் காட்சிகளை காட்டிலும் அழகராக வரும் லியோ சிவக்குமார், திவ்யாவாக வரும் நக்‌ஷா சரண் ஆகியோரது காட்சிகளே பெரும்பான்மையாக நிற்கிறது. படத்திற்கு அது தேவைப்பட்டது என்றாலும், படத்தின் வேகத்திற்கு அதுவே தடையாகவும் மாறி நிற்கிறது.


வங்கிக்கடனால் சாதாரண குடும்பங்கள் படும் அவஸ்தையையும், சில வங்கிகளுடன் சில கட்டுமான நிறுவனங்கள் இணைந்து செய்யும் செயல்களால் அவதிப்படுவதையும் காட்டிய விதம் யதார்த்தமாக இருந்தது. வங்கிகளில் வீட்டுக்கடன் உள்பட பல்வேறு கடன் வாங்கி அதனால் அவமானப்படுவர்களுக்கு அந்தக் காட்சிகளின் வலி நிச்சயமாக புரியும். அதை யதார்த்தத்திற்கு மிகாமல் காட்டியதற்கு பாராட்டுக்கள்.


பலமான இளையராஜா இசை..




இறுதிக்காட்சியில் ராமராஜன் கடன் பற்றி பேசும் வார்த்தைகள் நிச்சயம் அனைவருக்குமான அறிவுரையே. குறிப்பாக, கடன் அன்பை முறிக்கும் என்று சொல்லாதீர்கள். கடன் ஆயுளைக் குறிக்கும் என்று சொல்லும் வார்த்தை காலத்திற்கும் பொருத்தமான வார்த்தை.


ராமராஜனுக்கு அன்று இருந்த நட்சத்தர அந்தஸ்துக்கு ஏற்றாற்போலவே அவருக்கான காட்சிகளும், அவருக்கான ஆக்‌ஷன் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகளுக்கு எடிட்டர் கத்திரி போட்டிருந்தால் இரண்டாம் பாதி இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். படத்தின் மிகப்பெரிய பலமே இசைஞானி இளையராஜா ஆவார். ராமராஜன் படத்தில் இடம்பெற்ற அவரது சொர்க்கமே என்றாலும், செண்பகமே பாடல்களை ஆங்காங்கே தொட்டுச் சென்றிருப்பது ரசிகர்களை ரசிக்க வைத்தது.


கம்பேக் தந்தாரா?


படத்திற்கு பின்னணி இசையால் பெரும் பலம் சேர்த்துள்ளார். தந்தை - மகள் பாசப் பாடல்கள் இரண்டுமே சுகமான ரகம். ராமராஜன் படத்திற்கு பலம் சேர்ப்பதே இளையராஜா இசை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இரண்டாம் பாதியில் வந்தாலும் நடிகை தீபா தனது வெள்ளந்தியான நடிப்பால் அனைவரையும் வியக்க வைக்கிறார். அன்பைக் காட்டுவதும், சோகத்தில் அழுவதும் என அவரது நடிப்பு அபாரம்.


படத்தில் பெரியளவு நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. படத்தில் தொடக்கக் காட்சிகளில் வரும் நகைச்சுவைக்கும் பெரிய சிரிப்புகள் வரவில்லை. ராமராஜனுடன் இணைந்து ராதாராவி, எம்.எஸ்.பாஸ்கர் தங்கள் வயதுக்கு ஏற்ப அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மைம் கோபி, போஸ் வெங்கட் சிறப்பாக நடித்திருந்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் நடித்துள்ள ராமராஜனின் சாமானியன், சாமானியர்களின் பிரச்சினையை எடுத்துப் பேசியுள்ளதால் சாமானியர்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.


இன்றைய காலத்துக்குத் தேவையான கருத்தை கையில் எடுத்துச் சொன்னதாலே இயக்குநர் ராகேஷிற்கும் பாராட்டுக்கள். 90ஸ் கிட்ஸ்களுக்கு ராமராஜன் பற்றி ஏராளமாக தெரியும் என்பதால் மிக எளிதாக படத்தில் ஒன்றிவிட முடியும்.