தமிழ் சினிமாவில் அதிக அளவிலான வெள்ளிவிழா படங்களை கொடுத்த பெருமைக்குரிய இயக்குநராக கொண்டாடப்பட்டவர் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். ஒரு இயக்குநராக மட்டுமின்றி, நடிகர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமையாளராக விளங்கியவர் ஆர். சுந்தர்ராஜன்.


வைதேகி காத்திருந்தாள், பயணங்கள் முடிவதில்லை, மெல்லத் திறந்தது கதவு, அம்மன் கோயில் கிழக்காலே உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய அனுபவங்கள் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். 


 



இன்றைய இளைஞர்கள் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டால் உடனே இயக்குநராகி விடலாம் என மனக்கணக்கு போடுகிறார்கள். அதற்கு ஏராளமான கோர்ஸ்கள் எல்லாம் வந்து விட்டன. ஆனால் அது போன்ற எந்த ஒரு படிப்பும் இன்றி எப்படி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இயக்குநராக பரிமளிக்க முடிந்தது என்ற கேள்விக்கு ஆர். சுந்தர்ராஜன் பதில் அளித்து இருந்தார்.


“படிப்பு என்பது வேற தொழில் கல்வி என்பது வேற. பார்த்து கத்துக்குற அனுபவம் என்பது வேற மாதிரி இருக்கும். உதாரணத்துக்கு என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். எனக்கு ஐந்து வயது என்னுடைய அண்ணனுக்கு ஆறு வயது. எங்க அத்தை வீட்ல இருக்கும்போது மதியம் சாப்பிட வாங்க எனக் கூப்பிட்டாங்க.


பயங்கர பசியில வேகவேகமாப் போனோம். அங்க வாழை இலை இருந்ததும் நாங்க இரண்டு பேரும் போய் அங்கே உட்கார்ந்தோம். அப்போ எங்க அத்தை எங்களை எழுந்து போய் எதிர்பக்கம் உட்கார சொன்னாங்க. அங்க இரண்டு தட்டு வைச்சு இருந்தாங்க. நாய்க்கு சோறு போடுற மாதிரி போட்டாங்க.  பின்னாடி காலத்துல அவங்க வீட்ல தான் எங்க அண்ணனுக்கு பொண்ணு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 


 



அவங்க வீட்ல போய் காபி குடித்து விடக் கூடாது என்பதற்காக தான் காபி கடை வைத்து இருந்தும் காபி குடிக்கும் பழக்கத்தையே நான் விட்டுவிட்டேன். அன்னைக்கு நாய்க்கு போடுற மாதிரி சாப்பாடு போட்டப்போ  எனக்கு உறைச்சுது எங்க அண்ணனுக்கு உறைக்கல. அது அவமானப்படுத்துறது என்பதை நான் உணர்ந்தேன். எங்க அண்ணன் அதை சாதாரணமாக எடுத்து கொண்டான். அப்படியும் சில பேர் இருக்காங்க. அது மாதிரி ப்ராக்டிகலா பார்த்து இதுக்குள்ள இது மாதிரி விஷயம் இருக்கு என தெரிஞ்சுக்கிட்ட நான் இயக்குநராகிட்டேன். சும்மா படிச்சா மட்டுமே இயக்குநரா ஆகிவிட முடியாது. அனுபவம் தான் மிக முக்கியம்” என மிகவும் அழகாக எதார்த்தமாக பதில் அளித்து இருந்தார் ஆர். சுந்தர்ராஜன்.