எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்குவது குறித்து நடிகர் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார். 


தென்னிந்திய சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது நடிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் நடிப்பதை காட்டிலும் மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்றும் விதமாக இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கினார். இந்த படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. 






கேன்ஸ் திரையிடப்பட விழா, நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சி என ராக்கெட்ரி படம் பல இடங்களிலும் திரையிடப்பட்டது. இந்த படத்தில்  நம்பி நாராயணாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே கையாண்டிருந்தார். மேலும் ஆரம்பத்தில் ராக்கெட்ரி படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விலக மாதவனே இயக்குநரானார். 


இப்படம் வசூல் ரீதியாக சொதப்பியதாக சொல்லப்பட்டாலும் படத்தை இயக்க மாதவன் தனது வீட்டை விற்றதாக தகவல் பரவிய நிலையில் அதனை அவர் மறுத்தார். தாங்கள் எதையுமோ இழக்கவில்லை என்றும், பெருமையான லாபம் ஈட்டினோம் எனவும் மாதவன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் மாதவன் அடுத்ததாக இந்தியில் தோஹா என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கான புரோமோஷனில் கலந்து கொண்ட அவரிடம் எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 






அதற்கு மாதவன், தற்போது நடிப்பு துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், எந்த படத்தையும் இயக்குவதில் ஆர்வம் இருப்பதாகவும் நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தற்செயலாக இயக்குநர் ஆகிய நான் எதிர்காலத்தில் இயக்குநராகும் எண்ணத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நான் இன்னொரு படத்தை இயக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என சொல்வதற்கு மனதிற்கு நெருக்கமான கதைகள் அமைய வேண்டும் எனவும் கூறினார். 


ராக்கெட்ரி படத்தின் விளைவே மாதவன் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணமாக அமைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.