கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மனுதாரர்களை இன்று ஒரு மணி நேரத்தில் தங்களின் வாதங்களை முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது. மேலும், தங்களின் பொறுமையை இழந்து வருதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


ஒன்பதாவது நாளாக இந்த வழக்கில் வாதங்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் வாதங்களை வியாழனன்று முடிக்க வழக்கறிஞர்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் தருவதாகக் கூறியுள்ளது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, "உங்கள் அனைவருக்கும் ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறோம். நீங்கள் வாதங்களை முடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக வாதங்களை கேட்டுவிட்டோம்" என மூத்த வழக்கழிஞர் ஹூபேசா அகமாதியிடம் தெரிவித்துள்ளது.


ஹிஜாப் தொடர்பான வழக்கில் மனுதாரர் ஒருவரின் சார்பாக ஹூபேசா அகமாதி ஆஜராகினார். "இதற்கு முன் பல வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர். நாங்கள் பொறுமையை இழக்கிறோம்" என நீதிமன்ற கூறியது. இதற்கு நீதிபதிகளை பாராட்டி பேசிய அகமாதி, "நான் சொல்லியே ஆக வேண்டும். மதிப்பிற்குரிய நீதிபதிகள் எங்களின் வாதங்களை வற்றாத பொறுமையுடன் கேட்டீர்கள்" என்றார்.


"எங்களுக்கு வேறு வழி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என நீதிமன்றம் பதில் அளித்தது. அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் கே. நவத்கி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆகியோர் வாதிட்டனர். மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் முஸ்லிம் மனுதாரர்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.


முன்னதாக, ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா எழுப்பிய கேள்வி பெரும் விவாதத்தை கிளப்பி இருந்தது. விசாரணையின்போது, "நியாயமற்ற முறையில் வாதாட கூடாது. ஆடையை அணியாமல் இருப்பதும் உரிமைதானா" என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தேவ் தட் கமத், "பள்ளிகளில் யாரும் ஆடை அணியாமல் வருவதில்லை" என்றார். வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே நடைபெற்ற நீண்ட வாத பிரதி வாதத்தின்போது, நீதிபதி குப்தா பேசுகையில், "இங்குள்ள பிரச்னை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிவதை வலியுறுத்தி வருகிறது. மற்ற அனைத்து சமூகங்களும் ஆடை விதிகளை பின்பற்றுகின்றன. மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அது அணிய வேண்டும் இது அணிய வேண்டும் என்று கூறவில்லை" என்றார்.


பல மாணவர்கள் ருத்ராட்சமும் சிலுவை குறி கொண்ட செயினை அணிந்து வருவதாக வழக்கறிஞர் தெரிவித்ததற்கு, "அது சட்டைக்குள் அணியப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை யாரும் சட்டையைத் தூக்கிப் பார்க்கப் போவதில்லை" என நீதிபதி கூறினார்.