சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ’புஷ்பா’ படத்தை தயாரித்து வருகிறது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறையின் பொழுது படம் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை கொடுத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு . சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’ஓடு ஓடு ஆடு' என்கிற சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் , பென்னி தயால் குரலில் உருவாகியுள்ளது.
படம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிங்கிள் டிராக்கும் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சிங்கிள் டிராக்கையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புஷ்பா திரைப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும் மரம் கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.