சென்னையில் நண்பர்களுடன் குடித்துக் குதுகலமாக இருப்பதற்காக  விஐபிக்களுக்கான எஸ்கார்ட் வாகனத்தை அபேஸ் செய்த பலே போலீஸை போலீஸார் கைது செய்துள்ளனர். 


சென்னை ஆயுதப்படைக் காவலில் காவலராகப் பணியாற்றுபவர் சரவணன். வெள்ளிக்கிழமை வீக்கெண்ட் மோடில் இருந்த சரவணன் தனது நண்பர்களுடன் குடித்து மகிழ்ச்சியாக இருக்கத் திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டதோடு மட்டுமில்லாமல் ஆயுதப்படைக் காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஐபிக்களுக்கான எஸ்கார்ட் காரை அதற்காக அபேஸ் செய்து எடுத்துச் சென்றுள்ளார். நண்பர்களுடன் மது அருந்தி இரவைக் கழித்த சரவணன் சென்னை அரும்பாக்கம் சாலையில் தான் எடுத்துச் சென்ற எஸ்கார்ட் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். 


போலீஸ் பந்தோபஸ்துக்கு நடுவே கம்பீரமாக ஊர்ந்து வரும் எஸ்கார்ட் கார், அரும்பாக்கம் சாலையில் தறிகெட்ட தண்ணீர் லாரி போல எசகுபிசகாக வருவதைப் பார்த்த அந்தப் பகுதிப் பொதுமக்கள் காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த சரவணை அருகில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 


குடிபோதையில் இருந்த சரவணன் சுயநினைவு இல்லாததால் பிடிபட்ட பிறகும் சிரித்தபடியே சக போலீசாரிடம் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. 



குடிபோதையில் வந்தது சாமானியர் என முதலில் நினைத்த போலீசார் வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டியதும் போலீஸ்தான் என அறிந்ததும் ‘எலே! நீயா? நீயா!’ என்னும் ரகமாக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 



இதையடுத்து வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய போலீசார் குடிபோதையில் இருந்தார் என்பதை உறுதி செய்வதற்காக அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 


அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது சக போலீசார் என்பதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு முடித்துக் கொள்வார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 


பொதுவாகக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தண்டனையாக 10000 ரூபாய் அபராதமும் ஆறு மாதச் சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் அவரது வாகன உரிமம் பறிக்கப்பட்டு அவர் ஒருவருடம் வரை வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படும். காவலர் சரவணன் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 




அண்மையில்தான் காவலர்களுக்கான வார விடுமுறையை கட்டாயமாக்கி அறிவித்தார் டிஜிபி சைலேந்திர பாபு. தமிழ்நாட்டில் போலீசாருக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்; உடல்நலம், குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தர வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்தார். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும். காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும். தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட/ மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.’ என தெரிவித்திருந்தது.