தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத் தொடங்கி பிரபல தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் அனசுயா பரத்வாஜ்.
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு லைக்ஸ் அள்ளிய அனசுயா, இறுதியாக புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு சினிமா தாண்டியும் கவனமீர்த்தார்.
அனசுயா கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் டோலிவுட் சினிமாவில் நடித்து கவனமீர்த்த நிலையில், இணையத்தில் ஒருபுறம் அவரை ஒரு தரப்பு நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
மேலும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் எல்லை மீறி கமெண்ட் செய்த ரசிகரை செருப்பால் அடிப்பேன் என அனசுயா கமெண்ட் செய்தது பேசுபொருளாக மாறியது.
மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சென்ற ஆண்டு விமர்சித்து அனசுயா ட்வீட் செய்த நிலையில், அவரை மறுபுறம் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஆண்டி என வம்பிழுத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். தொடர்ந்து தன்னை ஆண்ட்டி என அவமதிப்பு செய்து பதிவிடுபவர்களின் கணக்குகள் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என அனசுயா கூறிய நிலையில், இந்த சர்ச்சை அடங்கியது.
இந்நிலையில் தன்னுடைய இன்றைய இன்ஸ்டாகிராம் பதிவால் அனசுயா மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
தான் மனமுடைந்து அழும் வீடியோவையும் ஒரு நீண்ட பதிவையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அனசுயா, தான் உறுதியாக இல்லாத இந்த காலக்கட்டத்தைப் பற்றி பதிவு செய்ய விரும்பியதாகவும், நன்றாக அழுது முடித்துவிட்டு, மிண்டு எழுந்து இந்த உலகை எதிர்நோக்க விரும்புவதாகவும் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் "ஐந்து நாள்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ இது, இப்போது நலமுடன் இருக்கிறேன் என்றும் நீங்கள் நேரில் சந்திக்காத நபர்களுக்கு மோசமான காரியங்களை செய்யும் முன், அவர்களது மனநிலை பற்றி யோசியுங்கள், அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதல நெகட்டிவிட்டியை கையாள முடியாமல் அனசுயா இப்படி அழுகிறார் என பலரும் விமர்சித்து வந்த நிலையில், அனசுயா முன்னதாக மற்றொரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், தான் மனமுடைந்திருந்த தருணத்தை மறக்காமல் இருக்கவே தான் அழும் வீடியோவை பதிவு செய்ததாகவும், தான் இப்போது ஓகேவாக இருப்பதாகவும் மற்றொரு பதிவில் அனசுயா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது வீடியோ பதிவுகளால் அனசுயா டோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார்.