அதர்வா , மணிகண்டன், நிகிலா விமல்,கெளதம் வாசுதேவ் மேனன், இளவரசு, உள்ளிட்டவர்கள் நடித்து பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் மத்தகம் இணையத் தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.


ஐந்து எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடர் மிகப்பெரிய கேங்ஸ்டர் கதை ஒன்றை உருவாக்குவதற்கான அத்தனை விரிவான கதைக்களத்தை கொண்டிருக்கிறது. அதில் ஒரு தொடக்கமாக அமைந்திருக்கும் முதல் சீசன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


கதைக்கரு




காவல் துறையின் உயர் அதிகாரியாக அறிமுகப்படுத்தப்படுகிறார் அஷ்வத் (அதர்வா). Lactose intolerance இருப்பதால் சமீபத்தில் குழந்தை பிறந்த தனது மனிவியைவிட்டு தனியறையில் தூங்குகிறார் என்பதே இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளும் முதல் குணாம்சம்.


இரவு நேர காவல் ரோந்துப்பணியில் தேடப்பட்டு வரும் ஒரு பிரபல குற்றவாளி காவலர்களிடம் அகப்படுகிறார். இந்தக் குற்றவாளியை விசாரிப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. சென்னையை மாநகரத்தில் இருக்கும் அத்தனை பெரிய தாதாக்களும் ஒரு பார்ட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரையும் நட்பாகப் பேசியும் தேவைப்பட்டால் மிரட்டியும் இந்தப் பார்ட்டிக்கு சம்மதிக்க வைக்கிறார் தலைமறைவாக இருக்கும் பிரபல ரவுடியான படாளம் சேகர் ( மணிகண்டன்).


ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட படாளம் சேகர் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து திடீரென்று இப்படி ஒரு பார்ட்டியை ஒருங்கிணைப்பதன் நோக்கம் என்ன? இதையெல்லாம் பட்டாளம் சேகர் யாருக்காக செய்கிறான் என்பதை, அவனை அவனது கூட்டாளிகளின் செல்ஃபோன்களை கண்காணிப்பது மூலம் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார் அஷ்வத். 




ஹீரோ வில்லன் இருவரும் பலம் நிறைந்த கதாபாத்திரங்கள். கடைசிவரை ஒருமுறைகூட நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் வில்லன் இருப்பது ஹீரோக்கு தெரியும், ஆனால் ஹீரோ என்று ஒருவன் இருப்பது வில்லனான பட்டாளம் சேகருக்கு தெரிவதே இல்லை. முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கு மணிகண்டன் தனது தோற்றம் மற்றும் பாவனைகள் மூலம் நிஜமாகவே ஒரு பயங்கரமான வில்லனுக்கான கம்பீரத்தைக் கொடுக்கிறார்!


மேல சொல்லனுமா...


மிகப்பெரிய ரவுடி கும்பலை மையப்படுத்தி நகரும் இந்த கதையில் நாம் இதுவரை சினிமாக்களில் பார்த்த அத்தனை வகையான ரவுடிக்களும் இருக்கிறார்கள். தொடரின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு கதாபாத்திரங்கள். ஒவ்வொரு ரவுடியைப் பற்றிய மொத்த விவரமும் சொல்லப்பட்டு வருகிறது. ஐந்து எபிசோட்களைக் கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் முழுவதும் இந்த கதாபாத்திரங்களின் அறிமுகங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.


அடுத்தடுத்த சீசன்கள் வெளியாக இருக்கின்றன என்றால் நிச்சயம் இயக்குநர் பிரசாத் முருகேசன் ஏதோ பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்! ஆனால் வழக்கமாக பிரச்னையை முதலில் காட்டிவிட்டு அதற்கு பின் இருப்பவர்களை காட்டும்போது இருக்கும் சுவாரஸ்யம் இந்தத் தொடரில் இல்லை. காரணம் பெரிய பெரிய ரவுடிகளை எல்லாம் ஆரம்பத்திலேயே காட்டிவிடும் மத்தகம் அவர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்று காட்டவில்லை. இதனால் விறுவிறுப்பை இழக்கிறது. 




அஷ்வத் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் இருக்கும் உறவுச் சிக்கல்கள், படாளம் சேகரின் காதல், துணைக்கதாபாத்திரமாக வரும் கெளதம் மேனனின் கதாபாத்திரங்கள் என எல்லாவற்றையும் முதல் சீசனில் தொட்டு மட்டுமே வைத்திருக்கிறார்கள்.


வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை பார்க்கும் சுவாரஸ்யம் மட்டுமே முதல் சீசனில் எதிர்பார்க்கலாம். சுவாரஸ்யமான துப்பாக்கிச் சூடு, எதிரும் புதிருமான விளையாட்டை பார்க்க அடுத்த சீசன் வரை காத்திருக்க வைத்திருக்கிறார் இயக்குநர்!