பெயர்: கொஹ்ரா (Kohrra – பனிமூட்டம் )


எபிசோட்கள் -6


கதாபாத்திரங்கள் : சப் இன்ஸ்பெக்டர் பல்பீர் சிங் (சுவிந்தர் விக்கி) அமர்பால் கருண்டி (பருன் சோப்தி), விஷால் ஹண்டா ஹர்லீன் சேதி, வருண் படோலா, மணீஷ் செளத்ரி, ரேச்சல் ஷெல்லி


எழுத்தாளர்கள் : குஞ்சித் சோப்ரா டிஜி சிசோடியா


இயக்குநர்: ரந்தீப் ஜா


கதை




பஞ்சாபின் ஒரு கிராமத்தின் வயல்வெளியில் பனிமூட்டமான ஒரு அதிகாலையில் ஒரு ஆணின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனைப் பார்க்கும் ஒரு இளைஞன் காவல் துறையினரிடம் தெரிவிக்கிறார். சப் இன்ஸ்பெக்டர் பல்பீர் சிங் மற்றும் – அந்த இடத்திற்கு வருகிறார்கள். இந்த கொலையை செய்தவர்கள் யார் என்கிற விசாரணை தகவல் கொடுத்த அந்த இளைஞனிடம் இருந்தே தொடங்குகிறது.


இறந்தது யார்?


இறந்தவனின் பெயர் பால். லண்டனில் செட்டில் ஆகி இன்னும் இரண்டே நாட்களில் நடக்க இருக்கும் தனது திருமணத்திற்காக இந்தியா வந்திருக்கிறான். பால் எப்படி இறந்தான் என்று உண்மைத் தெரிந்திருக்குக் கூடிய ஒரே நபர் இங்கிலாந்தைச் சேர்ந்த பாலின் பால்ய காலத்து நண்பன் லியம். ஆனால் அவனும் காணாமல் போய்விட்டான். பாலை திருமணம் செய்துகொள்ள இருந்த பெண் மனமுடைந்து போகிறார். பாலின் அம்மா அப்பா, சித்தப்பா, அவரது மகன், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகமாகின்றன.


இந்த கொலையை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் பல்பீர் சிங்கின் கணவனை பிரிந்த மகள் அறிமுகப்படுத்தப்படுகிறார். மேலும் சொத்திற்காக ஆசைப்படும் அவனது அண்ணன் அண்ணி அறிமுகமாகிறார்கள்.


யார் குற்றவாளி?


இந்த கதை சற்று சிக்கலானதாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தொடக்கத்தில் இருந்தே தெரிந்து விடுகிறது. ஒரு கொலை நடந்தால் அதற்கு காவல் அதிகாரிகளின் மனதில் முதலில் மனதில் வந்துபோவது  போதைப்பழக்கத்தால் சீர்கெட்டு கிடக்கும் பஞ்சாபின் ஒரு பெரிய இளைஞர் பட்டாளம். எந்த ஒரு தவறு நிகழ்ந்தாலும் ஒரு காவல் அதிகாரிக்கு குற்றம் சுமத்த எளிதான இலக்காக இருக்கிறார்கள். மேலிடத்தில் எதிர்பார்க்கப்படுவதும் அதுவே. 


எது குற்றம் ?




ஆனால் சற்று கூடுதலாக செல்லச்செல்ல இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனதில் பதிந்திருக்கும் உண்மைகள் வெளிவருகின்றன. சிறிய வயதில் இருந்து தனது மகனிடம் அன்பு காட்டாமல் கண்டிப்புடன் மட்டுமே வளர்க்கும் தந்தை, வாழ்க்கையில் ஒரு பணக்காரனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனது காதலை முறித்துக்கொண்ட பெண், தன்னை ஏமாற்றிய பெண்ணை திட்டி பாடல்கள் எழுதும் ஒரு உள்ளூர் ராப் பாடகன், எப்படியாவது தனது தந்தையிடம் ஒரு நாள் நல்ல பெயர் எடுத்துவிட  மாட்டோமா என்று ஆசைப்பட்டு கொலை முயற்சி வரை செல்லும் ஒரு மகன், தனது அப்பாவின் அலட்சியத்தால் தனது அம்மாவை இழந்த ஒரு மகளின் கோபம், சொந்த தம்பியின் சொத்திற்காக ஆசைப்பட்டு அவனை ஆசை வலையில் விழ வைக்கும் ஒர் சகோதரனின் பேராசை.....


இப்படி இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கும் அத்தனைக் கதாபாத்திரங்களின் மனதிலும் ஒரு குற்றத்தை செய்யக்கூடிய காரணம் இருந்துகொண்டே இருப்பது  வரிசையாக நாம் பார்க்கிறோம். இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிக முக்கியமான உண்மை ஒன்று கடைசியில் நமக்கு தெரியவருகிறது. அது தெரிய வரும்போது குற்றம் என்பது உண்மையில் என்ன என்கிற கேள்விக்கு நாம் வந்துவிடுகிறோம்.


முறிந்த உறவுகளின் கதை




இன்னொரு வகையில் தனது பெற்றோர்களுடன் ஏதோ ஒரு வகையில் உறவுகள் முறிந்த அவர்களது குழந்தைகளின் கதைகளாகவும் இந்த தொடர் இருக்கிறது. இந்த கொலை நடப்பதற்கு ஏதோ ஒரு வகையில் தங்களது பெற்றோர்களுடன் இந்த குழந்தைகளுக்கு இருக்கும் கசப்பான உணர்வும் ஒரு காரணமே. இவற்றை எல்லாம் தனது விசாரணையில் தெரிந்துகொள்ளும் சப் இன்ஸ்பெக்டர் பல்பீர் சிங்க் தனது சொந்த வாழ்க்கையும் அதே மாதிரி இருப்பதை உணர்ந்துகொள்கிறார். ஒரு குற்றத்தை செய்வதற்கு எல்லா வகையிலும் தான் தகுதியானவர் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவரது கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றின் குற்றவுணர்ச்சியை சுமந்தபடி இருக்கும் ஒன்றை சரி செய்ய நினைக்கிறார்.


கொஹ்ரா


கொஹ்ரா என்றால் பஞ்சாபி மொழியில் பனிமூட்டம் என்று பொருள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது  தெளிவில்லாத ஒரு வழியில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் செல்லும்போது பல உண்மைகளை  நாம் தெரிந்துகொள்கிறோம். மனிதர்களுக்கு உள்ளேயும் வெளியேயும்.