புஷ்பா 2 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லு அர்ஜூனின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ‘ஊ அன்ட்டாவா’ குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. அதே போல அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றது. தொடர்ந்து பான் இந்தியா திரைப்படம், பிரமாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கியது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால், இரண்டாம் பாகத்தை வேற லெவலில் எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது. முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடித்த வள்ளி கதாபாத்திரம் முடிவுக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தத் தகவலை தயாரிப்பாளர் மறுத்தார்.
இந்த நிலையில் அண்மையில் ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத்தகவல்களின் படி, நடிகை சாய் பல்லவியை புஷ்பா 2 வில் பழங்குடியினப்பெண்ணாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விழா மேடை ஒன்றில் இயக்குநர் சுகுமார் சாய் பல்லவியை ‘லேடி பவர் ஸ்டார்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பகத் பாசில் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அண்மையில் அல்லு அர்ஜூன் அமெரிக்காவில் நியூயார்க் நகர மேயரைச் சந்தித்தார். அப்போது அவருக்கு புஷ்பா படத்தின் பிரபலமான ஸ்டைலை கற்றுக்கொடுத்தார். அவர்களுடன் அல்லு அர்ஜுன் புஷ்பா ஸ்டைல் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.