புஷ்பா 2 படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


டோலிவுட் மற்றும் டோலிவுட் தாண்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா.


தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா படமும், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தன.


செம்மரக் கடத்தல் டான் புஷ்பாவாக அல்லு அர்ஜூன் எப்படி உருவெடுக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு இப்படம் வெளியான நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா, வில்லனாக நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


முதல் பாகத்தில் சில காட்சிகள் இழுவையாக இருந்ததாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு 'புஷ்பா 2' இன்னும் சிறப்பாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சுகுமார் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சுகுமார் - ஃபஹத் ஃபாசில் இணைந்திருக்கும் புகைப்படமும், அப்டேட் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.


பன்வர் சிங் ஷெகாவத் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் இரண்டாம் பாதியில் தோன்றியிருந்தார். இப்படத்தில் முதல் பாகத்தில் குறைந்த நேரமே ஃபஹத் தோன்றியிருந்தாலும் மிரட்டலான நடிப்பை வழங்கி அப்ளாஸ் அள்ளினார்.


முதல் பாகம் ஃபஹத் - அல்லு அர்ஜூன் இடையிலான மோதலுடன் மாஸாக நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.


இந்நிலையில், ”புஷ்பா 2 தி ரூல் படத்தில் 'பன்வர் சிங் ஷெகாவத்' எனும் ஃபஹத் ஃபாசில் உடனான முக்கிய ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. பழிவாங்குவதற்காக ஃபஹத் இந்த முறை திரும்புவார்” என படக்குழு ட்வீட் செய்துள்ளது.


மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஃபஹத் மிரட்டலாக இயக்குநர் சுகுமார் உடன் இணைந்திருக்கும் ஃபோட்டோவும் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.






சென்ற மாதம் ’புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


மேலும் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு ’புஷ்பா எங்கே?’ எனும் தேடலுடன் வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.