பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் டோலிவுட் சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’ (Pushpa 1 The Rise).


புஷ்பானா ஃபயர்..


அல்லு அர்ஜூனின் மாஸ், ஸ்டைல், ராஷ்மிகாவின் பாத்திரம், ஃபஹத் ஃபாசிலின் வில்லத்தனம், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இப்படம், சுமார் ரூ.360 கோடிகள் வரை வசூலித்தது.


பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படம் வெளிநாடுகளிலும் பெரும் ஹிட் அடித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உள்பட பல உலக அளவிலான பிரபலங்களைக் கவர்ந்து ரசிகர்களாக்கியது.


நிராகரித்த பிரபலங்கள்!


தற்போது புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இரண்டாம் பகுதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தில் நடிக்க இருந்து பின் நடிக்க முடியாமல் வாய்ப்பைத் தவறவிட்ட பிரபலங்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மகேஷ்பாபு




அதன்படி புஷ்பா படத்துக்காக முதலில் இயக்குநர் சுகுமார், தான் ஏற்கெனவே ‘நேனொக்கடினே’ படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர் மகேஷ்பாபுவை அணுகியுள்ளார். ஆனால் கதையில் ஒரு கட்டத்தில் ஆண்டி - ஹீரோவாகவும் உருவெடுக்கும் புஷ்பா கதாபாத்திரம் தனக்கு செட் ஆகாது என மகேஷ்பாபு இப்படத்தில் நடிக்காமல் தவிர்த்துவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஜய் சேதுபதி




அதேபோல் மொட்டை கெட்-அப்பில் வில்லத்தனமான சிரிப்பால் புஷ்பா படத்தில் அனைவரையும் மிரட்டிய ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரத்துக்காக படக்குழு முதலில் நடிகர் விஜய் சேதுபதியை தான் அணுகியதாம். ஆனால் ஏற்கெனவே விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம் என வரிசையாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தோன்றியதால், அதேபோன்று நடிக்க விரும்பாமல் இந்த வாய்ப்பை விஜய் சேதுபதி நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமந்தா




அதேபோல் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சமந்தாவை தான் அணுகியதாம் படக்குழு. ஆனால் சமந்தா ஏற்கெனவே இயக்குநர் சுகுமாரின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்திருந்த நிலையில், அதே போன்று மீண்டும் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பால் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இயக்குநர் மற்றும் தன் நெருங்கிய நண்பர் அல்லு அர்ஜூனுக்காக புஷ்பா படத்தின் ‘ஊ அண்டாவா’ பாடலில் நடனமாடி மொத்த லைம்லைட்டையும் தன் பக்கம் திருப்பினார் சமந்தா.


திஷா பதானி




இதே போல் பிரபல பாலிவுட் நடிகையும், கங்குவா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி தருபவருமான நடிகை திஷா பதானியை தான் முதலில் ‘ஊ அண்டாவா’ பாடலுக்காக படக்குழு அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் இப்பாடலில் தோன்ற முடியாமல், பின் இந்த வாய்ப்பு சமந்தாவை வந்தடைந்துள்ளது.


இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக நிச்சயம் ‘புஷ்பா 2 த ரூல்’ (Pushpa 2 The Rule) திரைப்படம் இருக்கும் என எதிர்பார்த்து அல்லு அர்ஜூன் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் காத்துள்ளனர். பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், “புஷ்பா எங்கே?” எனும் க்ளிம்ஸ் வீடியோவும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.