சென்னையில் நடைபெற்ற தண்ணீர் குடம் சண்டையில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள போஜராஜன் நகரில் வெங்கடேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். வெங்கடேசன் வசிக்கும் அதே தெருவில் சங்கர் என்ற நபர் மனைவி சாந்தி மற்றும் மகள் வள்ளியுடன் வசித்து வருகிறார். வள்ளி தண்டையார்பேட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளநிலை 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே முனியம்மாள் வீட்டு அருகே அந்த தெருவுக்கான தண்ணீர் குழாய் அமைந்துள்ளது. 


அங்கு தண்ணீர் பிடிக்க நேற்று முன்தினம் மாலையில் வந்த சாந்தி மற்றும் வள்ளி இருவரும் குடத்தில் தண்ணீர் பிடித்து முனியம்மாள் வீட்டு வாசலில் வைத்தனர். அப்போது அதனை எடுக்கும்படி அவர் கூறியுள்ளார். இதனால் முனியம்மாளுடன், சாந்தி மற்றும் வள்ளி இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இது கைகலப்பாக மாறியது. அப்போது முனியம்மாளை இருவரும் சேர்ந்து கைகளால் மற்றும் உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருதரப்பினர் சமாதானம் செய்தனர். 


இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் வண்ணாரப்பேட்டை போலீசில் சாந்தி மற்றும் வள்ளி இருவர் மீதும் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்டு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு முனியம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே முனியம்மாள் இறந்து விட்டதாக சொல்லியுள்ளனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 


சம்பவம் பற்றி தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் முனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அவர் இறந்ததாக சொல்லப்பட்டாலும், சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளி ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கியதால் முனியம்மாள் இறந்தரா என்கிற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரியும் என்ற நிலையில் கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை போலீசார் சாந்தி மற்றும் வள்ளியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.