தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.  ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியராகவும் இருக்கும் ரமேஷ் அரவிந்த் தற்போது மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகவும் எழுத்தாளராகவும் பரிணாமம் எடுத்துள்ளார். 




பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ரமேஷ் அரவிந்த், கர்நாடகா மாநிலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களிலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்து வருகிறார். 'ப்ரிதியிந்த ரமேஷ்' என கன்னடத்தில் அவர் வெளியிட்ட புத்தகம் 'அன்புடன் ரமேஷ்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 


ரமேஷ் அரவிந்த் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன விஷயங்கள், தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள், வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் திறமையை எப்படி காலத்திற்கு ஏற்றார் போல் வளர்த்து கொள்ள வேண்டும், மற்றவர்களுடன் நம்முடைய உறவுமுறையை எப்படி வைத்து கொள்ளவேண்டும், எந்த இடத்தில் தப்பு செய்கிறோம் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றின படைப்பு தான் 'அன்புடன் ரமேஷ்'. 




ரமேஷ் அரவிந்த் தன்னுடைய வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற 35 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் ஒரு சில எளிய வழிமுறைகள், சூட்சுமங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் குறைந்த காலத்தில் நேர்வழியில் வெற்றி பெற தன்னுடைய அனுபவத்தை வைத்து இந்த புத்தத்தை வெளியிட்டுள்ளார். 


ரமேஷ் அரவிந்த் நடித்த 'டூயட்' திரைப்படம் வெளியான அந்த சமயத்தில்  சதிலீலாவதி திரைப்படத்தில் மெயின் ரோலில் நடிகர் கமல்ஹாசன் மூலம் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதே படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதே படத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு 'ராமா சாமா பாமா' என்ற பெயரில் ரீ பிராண்ட் செய்து கன்னடத்தில் அவரே இயக்கி வெளியிட்டார். கமல்ஹாசன் அந்த படத்திலும் நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே சதி லீலாவதி திரைப்படம் ரமேஷ் அரவிந்த் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம். 


'டூயட்' படத்தில் இடம்பெற்ற 'என் காதலே என் காதலே...' பாடல் 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ட்ரெண்டிங் பாடலாக இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் கே. பாலச்சந்தர் இயக்கம், எஸ்.பி.பி குரல், ஏ.ஆர். ரஹ்மான் இசை என மிக பெரிய பாசிட்டிவ் எனர்ஜிகளின் கூட்டணி என்றாலும் அந்த பாடலுக்கு ரமேஷ் அரவிந்த் கொடுத்த எமோஷன் பாடலை மேலும் தூக்கி நிறுத்தியது. 


கே. பாலச்சந்தர் தான் ரமேஷ் அரவிந்த்தை கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழியிலும் அறிமுகப்படுத்தி வைத்தார். கே.பாலச்சந்தர் கடைசியாக நடித்த 'உத்தம வில்லன்' படத்தை இயக்கியவர் ரமேஷ் அரவிந்த். வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.