மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது.
புஷ்பா 2 கிளிம்ப்ஸ்:
மேலும், டோலிவுட்டில் கிரியேட்டிவ் ஜீனியஸ் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சென்ற 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக புஷ்பா பெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது.
விரைவில் டீசர், ட்ரெயிலர்:
மேலும் அல்லு அர்ஜூன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டீசர் அல்லது ட்ரெயிலர் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கான்சப்ட் டீசருக்கான முன்னோட்டமாக சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று இன்று காலை வெளியாகியுள்ளது. இதில் புஷ்பராஜின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும்படி ‘புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என்ற கேப்ஷனுடன் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்த நிலையில், அவரது எழுச்சியுடன் முதல் பாகம் நிறைவுற்றது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் புஷ்பா எப்படி சந்தனக் கடத்தல் மாஃபியாவின் ராஜாவாக உருவெடுக்கிறார் என்பதை மையப்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்ரீவள்ளி, சாமி, ஊ சொல்றியா என அனைத்து பாடல்களும் முதல் பாகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் பாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
உலகம் முழுவதும் புஷ்பா முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை புஷ்பா முதல் பாகம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.