இயக்குநர் பூரி ஜெகன்நாத், திரைப்பட விநியோஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியிருக்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியான "லைகர்" திரைப்படம் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கான விளம்பரமும் பெரிய அளவில் நடைபெற்ற நிலையில், காலையில் முதல் காட்சி சென்ற ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். காரணம், பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய படமா இது? என நொந்து கொள்ளும் அளவுக்கு இதன் திரைக்கதை இருந்தது.
இதனால் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், படக்குழுவினரை கடுமையாக சாடியிருந்தனர். இதனால் படம் வெளியான அன்றைய தினமே படம் படுதோல்வியை சந்திக்கும் என்பது தெளிவாக தெரிந்தது. அதன்படியே அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்து படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் பூரிஜெகன்நாத்திடம் நஷ்ட ஈடு கேட்டு அவர் வீட்டின் முன்னர் போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த செய்திகள் வெளியானது.
இது தொடர்பான வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டையும் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த நிலையில் படத்தின் இயக்குநர் பூரிஜெகன்நாத் விநியோஸ்தர்களை எச்சரிக்கும் விதமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசும் இயக்குநர் பூரிஜெகன்நாத், “ என்ன என்னை மிரட்டுகிறீர்களா? நான் பணத்தை திருப்பித் தர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்தித்து இருப்பதால்தான் நான் பணத்தை தர முன்வந்திருக்கிறேன். ஒரு கூட்டத்தை கூட்டி ஒரு தொகையை முடிவு செய்திருந்தோம். அதில் ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பி தருகிறேன் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அது மிகைப்படுத்தப்படுகிறது. இது இந்தத் தொகையை திருப்பி தருவதற்கான என்னுடைய முடிவை கேள்விக்குள்ளாக்குகிறது. நான் மரியாதைக்காக பணத்தை திருப்பி தருகிறேன். ஆனால் மரியாதை கரையும் போது ஒரு பைசாவை கூட என்னிடம் இருந்து வாங்க முடியாது.
நாம் அனைவருமே சூதாட்ட தொழிலில் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது சில படங்கள் வெற்றி பெறும், சில படங்கள் வெற்றி பெறாது. போக்கிரியிலிருந்து ஐ ஸ்மார்ட் ஷங்கர் வரை நிறைய விநியோகஸ்தர்கள், எனக்கு கடன்பட்டுள்ளார்கள். அப்படியானால் சங்கம் அதனை வசூலிக்குமா? நீங்கள் போராட்டம் நடத்த முடிவெடுத்து விட்டீர்களா? தாராளமாக நடத்துங்கள். ஆனால் ஒன்று, போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களுக்கு மட்டுமே நஷ்ட ஈடு தொகை கிடைக்கும்” என்று அதில் அவர் பேசியிருக்கிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.