ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா படமானது விமர்சன ரீதியிலும் சரி, வசூல் ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில், இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.



கேரளாவை சார்ந்த தைக்குடம் பிரிட்ஜ் எனும் மியூசிக் பாண்ட், காந்தாரா படத்தின் பாடல் மீது உரிம் கோரி யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளது. படத்தில் வரும் வராஹா ரூப்பம் எனும் பாடலானது, அவர்கள் சொந்தமாக மெட்டமைத்த  நவரசம் எனும் பாட்டின் காப்பி என கூறியுள்ளது. காந்தாரா படம் மீது சட்டரீதியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அப்பட்டமான பதிப்புரிமைச் சட்ட மீறலில் காந்தாரா படக்குழு ஈடுபட்டுள்ளதாக இசைக்குழுவினர் தங்கள் பதிவில்  குறிப்பிட்டுள்ளனர். 






தைக்குடம் பிரிட்ஜ் பாடல் குழுவினர், அவர்களின் நவரச பாடலின் போஸ்டரையும், வராஹா ரூப்பம் போஸ்டரையும்  ஒன்றாக இணைத்து போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவின் கீழே, “எங்கள் இசையை கேட்போருக்கு நாங்கள் ஒன்றை அறிவிக்கிறோம். தாய்க்குடம் ப்ரிட்ஜுக்கும், 
காந்தாரா படக்குழுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்கள் நவரச பாடலை காப்பி அடித்து பதிப்புரிமைச் சட்டங்களை அப்பட்டமாக மீறிவிட்டனர். ஒரு விஷயத்தை ரசித்து அதில் இருந்து மற்றொன்றை உருவாக்குவதற்கும், காப்பி அடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதனால், இதற்கு பொறுப்பான க்ரியேட்டிவ் குழுவின் மீது நாங்கள் நிச்சயம் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் பாடலை பயன்படுத்த, இவர்கள் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.” என்று அவர்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இதுவரை, இந்த சர்ச்சை குறித்து பதலளிக்க, ரிஷப் ஷெட்டியோ, ஹொம்பாலே ப்லிம்ஸோ முன்வரவில்லை.




காந்தாரா படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கிய ரிஷப் ஷெட்டி, முன்னணி கதாப்பத்திரமாக அவரே நடித்துள்ளார். இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் அதிகமான வசூலை புரிந்து வருகிறது. 200 கோடி வசூலை, கூடிய விரைவில் எட்டவுள்ளது. குறைந்த பொருட்செலவில் உருவான காந்தாரா படமானது, அதிக பார்வையாளர்களை பெற்ற ஹொம்பாலே பிலிம்ஸின் படமாகும் என்பது குறிப்பிடதக்கது.