கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் கடைசிப் படமான கந்தடா குடி வரும் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தடா குடி ஆவணப்படமும் புனீத் குடும்பமும்:
புனீத் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு ‘ஜேம்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் வெளியாகும் என்று ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால், அவர் நடித்து உருவாக்கியுள்ள ‘கந்தடா குடி’ என்ற ஆவணப்படத்தின் டீஸர் வெளியானது.
1973-ம் ஆண்டு ‘கந்தடா குடி’ என்ற பெயரில், புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. 1994-ம் ஆண்டு புனித் ராஜ்குமாரின் அண்ணன் ஷிவ் ராஜ்குமார் ‘கந்தடா குடி -2’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் 2022ல் கந்தடா குடி ஆவணப்படம் வெளியாகவுள்ளது. மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புனீத் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படமும் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான திரைப்படம்.
பிரபல காட்டுயிர் ஒளிப்பதிவாளரான அமோகவர்ஷாவுடன் இணைந்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் புனித் ராஜ்குமார். கர்நாடக மாநிலத்தின் காடுகளின், மலைகளின், கடல்களின் பெருமையைச் சொல்லும் விதத்திலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கந்தடா குடி’ என்றால் ‘சந்தனங்களின் கோயில்’ என்று பொருள்.
அப்புவாகிய புனீத் ராஜ்குமார்:
கன்னடத் திரையுலகின் முதல் குடும்பம் நடிகர் ராஜ்குமாருடையது. கன்னடத்து நடிகர் திலகம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பர்வதம்மாவுக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகள் என அனைவருமே திரைப்பட நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் என ஏதோ ஒருவகையில் கன்னடத் திரையுலகுடன் தொடர்பில் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். இப்படியான குடும்பத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகிற்கு பெரியாக இடியாக வந்தது.
கன்னட சூப்பர் ஸ்டார் , அப்பு என கொண்டாடப்பட்ட புனித்ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. இன்னும் அவரது ரசிகர்கள் அவரின் இழப்பிலிருந்து மீளவில்லை. உயிருடன் இருந்த பொழுது புனித் ராஜ்குமார் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தவர். இறந்த பின்னர் அவரின் கண்கள் தானமாக பெறப்பட்டு, அவரது 2 கண்கள் மூலமாக ந4 பேருக்கு பார்வை கிடைத்தது. புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டன. 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார்.