கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று பெங்களூருவில் மரணமடைந்தார். 46 வயதான அவரது மரணம் எதிர்பாராத ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவரை இறுதியாக காண்பதற்காக மருத்துவமனையில் முன் கூட்டம் கூட்டமாகக் கூடி வருகின்றனர். இந்த ஆண்டு தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் புனீத் ராஜ்குமார். அவரது மறைவுக்குப் பிறகு, இந்த சர்ப்ரைஸ் வீடியோவைப் பலரும் கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் புனீத் ராஜ்குமார். அவரது திரைப்படங்களில் அவர் வெளிக்காட்டும் திறமை மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையில் அவரது குணத்திற்காகவும் ரசிகர்கள் அவரைப் பெரிதும் விரும்புகின்றனர். பல்வேறு வயது வித்தியாசங்கள் உள்ளவர்களும் புனீத் ராஜ்குமாரின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். எனவே, புனீத் ராஜ்குமாரைப் பார்ப்பதோ, நெருங்குவதோ, ஒரு `ஹலோ!’ சொல்வதோ, செல்ஃபி எடுத்துக் கொள்வதோ அவரது ரசிகர்கள் பலருக்கும் மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த `யுவரத்னா’ திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் சிலருக்கு சர்ப்ரைஸ் அளிக்கப்பட்டது. புனீத் ராஜ்குமார் குறித்து சில வார்த்தைகள் பேசுவதற்காக சில ரசிகர்கள் அழைக்கப்பட்டனர். மேடையின் பின்பக்கம் மறைந்திருந்த நடிகர் புனீத் ராஜ்குமார் பேசிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வணக்கம் சொல்வது, அமைதியாக பின்னால் நின்று பயமுறுத்துவது முதலான செயல்களைச் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்திருந்தார்.
இந்த மொத்த நிகழ்வும் புனீத் ராஜ்குமாரின் ரசிகர்களின் முகங்களில் அதிர்ச்சி, மகிழ்ச்சி முதலான பல்வேறு முகபாவங்களை உருவாக்கியது. இந்த வீடியோ கடந்த மார்ச் மாதம், நடிகர் புனீத் ராஜ்குமாரின் பிறந்த நாளின் போது அவரது சமூக வலைத்தளக் கணக்குகளில் வெளியிடப்பட்டது.
கன்னடத் திரையுலகின் மூத்த நடிகர்கள் ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனான புனீத் ராஜ்குமார் தனது திரையுலகப் பயணத்தைக் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கியவர். 1985ஆம் ஆண்டு, கன்னட மொழியில் வெளியான `பெட்டடா ஹூவு’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் புனீத் ராஜ்குமார். யுவரத்னா, ராஜகுமாரா, அஞ்சனி புத்திரா, பவர், அப்பு முதலான 29 திரைப்படங்களில் நடித்தவர் புனீத் ராஜ்குமார். தனது ரசிகர்களால் அன்போடு `அப்பு’ என்று அழைக்கப்பட்டவர். அவரது எதிர்பாரா மரணம் அவரது பல கோடி ரசிகர்களின் இதயங்களில் கனத்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் இந்தியத் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகவும் கருதப்படுகிறது.