விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு ஒரு காமெடியனாக அறிமுகமானவர் புகழ். அதைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி முதல் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களை தனது வித்தியாசமான முக பாவனைகளாலும், சுட்டித்தனமான செயல்களாலும் கவர்ந்தார்.


 




சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவையால் கலக்கினார். தற்போது ஹீரோவாகவும் "மிஸ்டர். ஜூ கீப்பர்" என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

காதலியை கரம் பிடித்தார் :

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான கோவையை சேர்ந்த பென்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புகழ். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தனது காதலி பென்ஸி குறித்து பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற்ற பின்னர் தான் திருமணம் என்பதால் வைராக்கியமாக இருந்து காதலியை பெற்றோர்களின் சம்மதத்துடன் கைப்பிடித்தார். மனைவி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து முறைப்படி மற்றும் இஸ்லாம் முறைப்படி என இருமுறை திருமணம் செய்து கொண்டனர். 



வெட்டிங் டே சர்ப்ரைஸ் :

இவரின் திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், புகழ் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு இன்பமான செய்தியை பகிர்ந்துள்ளார். பென்ஸி கருவுற்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் மனைவிக்கு வாழ்த்து சொல்லி அழகான குறிப்பு ஒன்றையும் புகழ் பகிர்ந்துள்ளார்.

"என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை.


என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

புகழின் இந்த இன்ஸ்டா போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் அவர்கள் புகழ் - பென்ஸி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இவர்களது ரசிகர்கள்.