பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் மது கொண்டாட்டம், அளப்பறியதாகிவிட்டது. நல்லது, கெட்டது எது நடந்தாலும், மதுவோடு தள்ளாடுபவர்களை தான் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு மது, மக்களோடு கலந்துவிட்டது. இதிலிருந்து எப்படி இவர்களை மீட்பது என்பதே பெரிய கவலை தான். 

அதெல்லாம் ஒருபுறமிருக்க, புதுச்சேரியில் ஒரு மதுபானக்கடை, அதிரடி புத்தாண்டு சலுகையை அள்ளி வீசியிருக்கிறது.



புதுச்சேரி என்றாலே, சலுகை தானே என நீங்கள் நினைக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்களுக்கு புதுச்சேரி மதுபானங்களின் விலையே சலுகை தான், ஆனால், புதுச்சேரிக்காரர்களுக்கு, அங்குள்ள விலையும் அதிகமாக தான் தெரியுமாம். சரி, அது அவரவர் பாடு. விசயத்திற்கு வருவோம். 

புதுச்சேரியில் மதுவிற்பனை பரவலாக்கப்பட்ட ஒன்று. அதனால் அங்கு விற்க கடும் போட்டி இருக்கும். வாடிக்கையாளரை வரவேற்பதில், அவ்வப்போது சலுகைகளை அள்ளி வீசுவார்கள். 

இன்று இரவு கடந்தால் புத்தாண்டு. மதுபானம் இல்லாத கொண்டாட்டமா... விற்கவும், வாங்கவும் போட்டா போட்டி இருக்குமே.



 

அப்படி ஒரு போட்டியை சமாளிக்க தான், ஒயின்ஸாப் ஒன்று, ஒரு குவாட்டர் வாங்கினால், ஒரு சிக்கன் 65 இலவசம் என அறிவித்துள்ளது. அதாவது, நீங்கள் வாங்கும் மதுபானத்திற்கு சைடிஷ் கொடுத்துவிடுவார்கள். மதுபானத்திற்கு மட்டும் நீங்கள் செலவு செய்தால் போது, மற்றபடி எந்த செலவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை,‛நீங்க வந்தா மட்டும் போதும்...’ என்பதைப் போல அறிவித்திருக்கிறார் அதன் உரிமையாளர். 

 

டிசம்பர் 30ம் தேதியான நேற்றே அந்த ஆஃபர் தொடங்கிவிட்டதாம், ஜனவரி 1 வரை இந்த ஆஃபர் இருக்குமாம். நம்மூரில் விற்கும் விலைக்கு ,ஊறுகாய் ஃப்ரீயா கொடுத்தாலே, இன்ப அதிர்ச்சியாகிவிடுவார்கள். ஆனால், அங்கு இந்த ஆஃபர் கொடுத்து கூட இன்னும் மந்தமான விற்பனை தான் நடக்கிறதாம். ‛கருப்பன் குசும்பன்... இன்னும் எதிர்பார்க்கிறான்’ போல. 



ஆண்டின் இறுதி நாளான இன்று முதல், நாளை வரை விட்டதை பிடித்து விடலாம் என்கிற நம்பிக்கையில், கோழிகளை பொரித்து வைத்து, காத்திருக்கிறார்கள்! 

இதுஒருபுறம் இருக்க, இந்த ஆஃபரை கேள்விப்பட்ட வேறு சில ஒயின்ஷாப் ஓனர்கள், காடை 65, நத்தை 65, நண்டு 65 என குடிமகன்களை கவரும் , ஆஃபர்களை அறிவிக்க அதிரடியாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக் கொண்டாட்டம் என்பார்கள். இங்கு மதுபானக்கடைக்காரர்களின் போட்டி, குடிமகன்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இது ஒருபுறம் என்றால், இணையத்தில் வைரலாகி வரும் இந்த அறிவிப்பை கண்டு, தமிழ்நாடு குடிமகன்கள் கலங்கிப் போயுள்ளனர்.