2012 இல் வெளியாகி உலகம் முழுவதும் வைரலான PSY இன் GANGNAM STYLE பாடல் யூட்யூபில் 500 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


கங்னம் ஸ்டைல்


யூடியூப் , இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களின் வருகை உலகம் முழுவதும் இருக்கும் மக்களை ஒரே தளத்தில் இணைத்துள்ளன. இந்த தளங்களில் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ஒரே பாடலை, புகைப்படத்தை , படத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். அவற்றைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். எது சிறந்தது என்று சண்டைப்போட்டுக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக கொரியன் பாடல்கள், வெப் சீரீஸ்களுக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று. ஸ்குவிட் கேம், பி.டி எஸ் என இளைய தலைமுறையினர் கொரிய நிகழ்ச்சிகளுக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். கொரியன் நிகழ்ச்சிகளின் மேல் இவ்வளவு பெரிய மோகம் உருவாக காரணமாக இருந்த அல்லது முதல்முறையாக உலகம் முழுவதும் வைரலாகிய முதல் கொரியப் பாடல் என்றால் PSY யின் GANGNAM STYLE பாடலைச் சொல்லலாம்.


500 கோடி பார்வையாளர்கள்


எப்படியோ பறந்து வந்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மனிதரின் செல்ஃபோனிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல் ஒலித்திருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் கங்னம் ஸ்டைல் என்கிற அந்த வார்த்தையை முணுமுணுக்காதவர்கள் பல்லில்லாத பொக்கைவாய் தாத்தா பாட்டிகள் மட்டும்தான். உலகம் முழுவதும் வைரலான இந்தப் பாடல் செல்ஃபோன் கடைகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒலிக்கப்பட்டிருக்கிறது. கல்யாண நிகழ்ச்சிகளில் கும்பலாக சேர்ந்து க்ரூப் டான்ஸ் ஆட பயன்பட்டிருக்கிறது. பள்ளி கல்லூரி ஆண்டு விழா கல்சுரல்ஸில் மேடையில் ஆரவாரத்தை கிளப்பியிருக்கிறது.





ஒரு பாடல் எத்தனை நாட்கள், வருடங்கள் மக்களின் மனதில் இருக்க முடியும். இளையராஜா , ஏ ஆர் ரஹ்மான் என்றால் கூட பரவாயில்லை. ஏதோ ஒரு மொழியில் ஏதோ ஒரு பாடல் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். மீண்டும் மீண்டும் ரிபீட் மோடில் இந்தப் பாடலைக் கேட்கிறார்கள். அப்படி கேட்டு கேட்டு இன்று இந்த பாடல் யூடியூபில் 500 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த பாடலை பாடிய PSY யின் பிறந்தநாளான இன்று அவரது பாடல் இந்த சாதனையைப் படைத்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகமளித்திருக்கிறது